கோவை சித்த மருத்துவ சிறப்பு சிகிச்சை மையத்தில் - குணமடைந்து வீடு திரும்பிய 31 கரோனா நோயாளிகள் :

கோவை சித்த மருத்துவ சிறப்பு சிகிச்சை மையத்தில் -  குணமடைந்து வீடு திரும்பிய 31 கரோனா நோயாளிகள் :
Updated on
1 min read

கோவையில் உள்ள சித்த மருத்துவ சிறப்பு சிகிச்சை மையத்தில் இதுவரை 31 கரோனா நோயாளிகள் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.

மிதமான பாதிப்பு உள்ள கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க கோவை காந்திபுரத்தில் உள்ள மாநகராட்சி திருமண மண்டபத்தில் சித்த மருத்துவ சிறப்பு சிகிச்சை மையம் கடந்த ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கப்பட்டது. அங்கு சித்தா, ஆயுர்வேதா, ஹோமியோபதி, இயற்கை மருத்துவ மருத்துவர்களைக் கொண்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுதொடர்பாக இ.எஸ்.ஐ மருத்துவமனை ஆயுஷ் மருத்துவ பிரிவு தலைவரும், சிகிச்சை மையத்தின் பொறுப்பு அலுவலருமான டாக்டர் கே.பாபு கூறும்போது, “சிகிச்சை மையத்தில் ஆண்களுக்கென 26 படுக்கைகள், பெண்களுக்கு 19, குழந்தைகளுக்கு 5 படுக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதிகபட்சம் 10 சதவீதம் வரை நுரையீரல் பாதிப்பு உள்ள நோயாளிகளை இங்கு அனுமதிக்கிறோம். தொற்று உறுதியாகி இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு வருபவர்களில் லேசான காய்ச்சல், சளி, பசியின்மை, உடல்வலி போன்றவை உள்ளவர்கள் தனியாக பிரிக்கப்பட்டு, அவர்களில் சித்த மருத்துவ சிகிச்சையில் விருப்பம் உள்ளவர்கள் இங்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

இங்கு சிகிச்சை பெறுவோருக்கென தனி உணவு அட்டவணை உருவாக்கப்பட்டுள்ளது. அதன்படி, உப்பு, மஞ்சள் பயன்படுத்தி வாய்கொப்பளித்தல், நீராவி பிடித்தல், யோகாசனப் பயிற்சிகள் போன்றவை அளிக்கப்படுகின்றன. இதுதவிர, மூலிகை தேநீர், கபசுர குடிநீர் உள்ளிட்டவை அளிக்கப்படுகின்றன. வாசனை, சுவை ஆகியவற்றை இழந்தவர்களுக்கு அவை திரும்ப வருவதற்கான சிகிச்சை அளிக்கப்படுகிறது. சிகிச்சைக்கு அனுமதிக்கப்படுபவர்களுக்கு 5 அல்லது 7-வது நாளில் மீண்டும் ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. அதில், தொற்று இல்லை என உறுதியான பிறகே நோயாளிகள் வீட்டுக்கு அனுப்பிவைக்கப்படுகின்றனர். வீடுதிரும்புவோர் 15 நாட்கள் சாப்பிட ஏதுவாக நெல்லிக்காய் லேகியம், அமுக்கரா சூரணம் ஆகியவற்றை அளிக்கிறோம். வீட்டுக்கு சென்ற பிறகும் யோகா பயிற்சியை தொடருமாறு அறிவுறுத்துகிறோம். தற்போதுவரை இங்கு 31 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி இந்த சிகிச்சை முறை பின்பற்றப்படுகிறது. மேலும், நோயாளிக்கு உள்ள பிரச்சினைக்கு ஏற்ப மருந்துகளை அளிக்கிறோம்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in