

கரோனா தொற்றை கட்டுப்படுத்த தமிழக அரசு சார்பில் பல்வேறுகட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பெரிய வணிக வளாகங்கள், வணிக நிறுவனங்கள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது. அதாவது 3,000 சதுர அடிக்கு மேல் உள்ளகடைகள் செயல்பட அனுமதி கிடையாது என அரசு தெரிவித்துள்ளது.
ஆனால், தூத்துக்குடியில் சில பெரிய வணிக நிறுவனங்கள் கரோனா பாதுகாப்பு விதிமுறைகளை மீறி செயல்பட்டு வருவதாக மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல்கிடைத்தது. ஆட்சியர் கி.செந்தில்ராஜ் உத்தரவின் பேரில் மாநகராட்சி ஆணையர் சரண்யா அறிமேற்பார்வையில் மாநகராட்சி அதிகாரிகள் வணிக நிறுவனங்களை கண்காணித்தனர்.
தூத்துக்குடி பாளையங்கோட்டை சாலையில் உள்ள ஒரு ஜவுளிக் கடை கரோனா தடுப்பு விதிமுறைகளை மீறி செயல்பட்டு வந்தது தெரியவந்தது. அந்த கடையை மாநகராட்சி அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.
இதேபோல பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள மற்றொரு ஜவுளிக் கடையும் விதிமுறைகளை மீறி செயல்பட்டு வந்ததால், ரூ.5,000 அபராதம் விதிக்கப்பட்டது.