

தூத்துக்குடியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட 4 இளஞ்சிறார்கள் உட்பட 5 பேரைபோலீஸார் கைது செய்தனர்.
தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் திருட்டு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தன. இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க தூத்துக்குடி நகர டிஎஸ்பி கணேஷ் மேற்பார்வையில், தென்பாகம் காவல் உதவி ஆய்வாளர் வேல்ராஜ் தலைமையில் தனிப்படை அமைத்துஎஸ்பி ஜெயக்குமார் உத்தரவிட்டார். தனிப்படை நடத்திய விசாரணையில் தூத்துக்குடி மீனவர் காலனியைச் சேர்ந்த லேயோன் மகன் மரியக்கண் ஜென்ஸ்டன்(20) மற்றும் 15, 16 வயது மதிக்கத்தக்க நான்கு இளஞ்சிறார்கள் சேர்ந்து திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது. மரியக்கண் ஜென்ஸ்டன் மற்றும் நான்கு இளஞ்சிறார்களை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து மொத்தம் ரூ.1.75 லட்சம் மதிப்புள்ள 5 இருசக்கர வாகனங்கள், மடிக்கணினி மற்றும் 7 செல்போன்கள் கைப்பற்றப்பட்டன.
தனிப்படை போலீஸாரை எஸ்பி பாராட்டினார்.