Published : 04 May 2021 03:13 AM
Last Updated : 04 May 2021 03:13 AM

கிருஷ்ணகிரியில் தலா 3 இடத்தில் திமுக, அதிமுக வெற்றி :

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 3 தொகுதிகளில் திமுக கூட்டணியும், 3 தொகுதிகளில் அதிமுகவும் வெற்றி பெற்றுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பர்கூர், ஓசூர் தொகுதியில் திமுகவும், தளியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி, வேப்பனப்பள்ளி தொகுதிகளில் அதிமுகவும் வெற்றி பெற்று உள்ளது.

3-வது முறையாக பர்கூரில் திமுக

பர்கூர் தொகுதியில் 1996-ம் ஆண்டு நடந்த தேர்தலில் ஜெயலலிதா வெற்றி வாய்ப்பை இழந்தார். திமுகவைச் சேர்ந்த இ.ஜி.சுகவனம் வெற்றி பெற்றார். 2019-ம் இடைத்தேர்தலில் திமுகவை சேர்ந்த கே.ஆர்.கே.நரசிம்மன் வெற்றி பெற்றார்.

இந்த இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடவில்லை. தற்போது நடந்த தேர்தலில் திமுகவை சேர்ந்த மதியழகன், 12 ஆயிரத்து 614 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 3-வது முறை யாக பர்கூரில் திமுக வெற்றி பெற்றுள்ளது.

ஊத்தங்கரை அதிமுகவின் கோட்டை

2011-ம் ஆண்டு ஊத்தங்கரை (தனி) தொகுதி உருவாக்கப்பட்டது. கடந்த 2011, 2016-ம் ஆண்டு தேர்தல்களில் அதிமுக வெற்றி பெற்றது. 2 முறையும் மனோரஞ்சிதம் நாகராஜ் எம்எல்ஏவாக இருந்தார். தற்போது நடந்த தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட தமிழ்செல்வம், 28 ஆயிரத்து 387 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இத்தொகுதியை 3-வது முறையாக அதிமுக கைப்பற்றி உள்ளது.

எதிர்க்கட்சி வரிசை

2011-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட வேப்பனப்பள்ளி தொகுதியில் 2011-ல் திமுகவைச் சேர்ந்த செங்குட்டுவன், 2016-ல் திமுகவைச் சேர்ந்த முருகன் ஆகி யோர் வெற்றி பெற்றனர். அப்போது நடைபெற்ற தேர்தல்களில் தமிழகத்தில் அதிமுக ஆட்சியை பிடித்தது. இதனால் எதிர்கட்சி உறுப்பினர்களாக செயல்பட்டனர். இந்நிலையில், தற்போது நடைபெற்ற தேர்தலில் அதிமுக வேட்பாளர் கே.பி.முனுசாமி 3 ஆயிரத்து 54 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தற்போது, தமிழகத்தில் திமுக ஆட்சி அமைய உள்ளது. வேப்பனப்பள்ளி தொகுதியில் 3 முறை நடைபெற்ற தேர்தல்களிலும் வெற்றி பெற்றவர்கள் எதிர்கட்சி வரிசையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஓசூரில் மீண்டும் திமுக

ஓசூர் தொகுதி உருவாக்கப்பட்டது முதல் தேசிய கட்சிகளே வெற்றி பெற்றது. மாநில கட்சிகள் வெற்றி பெறாத தொகுதியாக இருந்த ஓசூரில் 2016-ல் நடந்த தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றது. 2019-ல் நடைபெற்ற இடைத்தேர் தலில் திமுகவைச் சேர்ந்த சத்யா வெற்றி பெற்றார். தற்போது நடைபெற்ற தேர்தலில் திமுக ஒய்.பிரகாஷ், 12 ஆயிரத்து 367 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஓசூர் தொகுதியை மீண்டும் திமுக கைப்பற்றி உள்ளது.

தளியில் 3-வது முறை

தளி சட்டப்பேரவை தொகுதியில் 2006-ல் நடந்த தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்ட டி.ராமச்சந்திரன் வெற்றி பெற்றார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளராக பொறுப்பில் இருக்கும் இவர் மீண்டும் 2011-ல் தளியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2016-ல் வெற்றி வாய்ப்பை இழந்தார். தற்போது நடந்த தேர்தலில் ராமச்சந்திரன் 56 ஆயிரத்து 70 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதன் மூலம் தளி தொகுதியில் 3-வது முறையாக ராமச்சந்திரன் எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அதிமுகவுக்கு 7-வது வெற்றி

கிருஷ்ணகிரி தொகுதியில் ஏற்கெனவே நடைபெற்ற 15 தேர்தல்களில் அதிமுக 6, திமுக 6, காங்கிரஸ் 2 மற்றும் சுயேச்சை ஒரு முறை வெற்றி பெற்றுள்ளனர். தற்போது நடந்த தேர்தலில் அதிமுக வேட்பாளர் அசோக்குமார் 794 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார். இதன் மூலம் கிருஷ்ணகிரி தொகுதியில் அதிமுக 7-வது முறையாக வெற்றி பெற்றுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x