Published : 04 May 2021 03:14 AM
Last Updated : 04 May 2021 03:14 AM

குமரியில் 6 தொகுதிகளில் கடந்த தேர்தலை விட - 10 மடங்கு வாக்குகள் அதிகம் பெற்ற நாம் தமிழர் கட்சி :

நாகர்கோவில்

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சட்டப்பேரவை தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி கடந்த தேர்தலை விட 10 மடங்கு வாக்குகள் அதிகமாக பெற்றுள்ளது. அதிமுக, திமுக கூட்டணிக்கு அடுத்த படியாக அதிகமானோர் இக்கட்சிக்கு வாக்களித்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல், பத்மநாபபுரம், விளவங்கோடு, கிள்ளியூர் ஆகிய6 சட்டப்பேரவை தொகுதிகளில் அதிமுக- பாஜக கூட்டணி, திமுக-காங்கிரஸ் கூட்டணிஇடையே பலத்த போட்டி நிலவியது. இதுபோல் கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத் தேர்தலில் காங்கிரஸ், பாஜக இடையே நேரடி போட்டி நிலவியது.

நாம் தமிழர் கட்சி குமரியில் 3 சட்டப்பேரவை தொகுதிகளில் பெண் வேட்பாளர்களையும், 3 தொகுதிகளில் ஆண் வேட்பாளர்களையும் களம் இறக்கியது.

அனைத்து தொகுதிகளிலும் குறிப்பிடத்தக்க அளவில் வாக்குகள் பெற்று நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் 3-வது இடத்தைபிடித்துள்ளனர். குறிப்பாக கன்னியாகுமரி, நாகர்கோவில் தொகுதியில் வேட்பாளர்களின் வெற்றி, தோல்விக்கு நாம் தமிழர் கட்சி வாக்குகளை பிரித்தது முக்கியமான காரணமாகியிருப்பது தெரியவந்துள்ளது.

குமரி மாவட்டத்தில் 6 சட்டப்பேரவை தொகுதிகளிலும் மொத்தம் 10,81,432 வாக்குகள் பதிவாகியிருந்தன. இவற்றில்84,591 வாக்குகளை நாம் தமிழர் கட்சிபெற்றுள்ளது. ஆனால், கடந்த 2016 சட்டப்பேரவை தேர்தலில் 6 தொகுதிகளிலும் 8,756 வாக்குகளை மட்டுமே இக்கட்சி பெற்றிருந்தது. தற்போது 10 மடங்கு வாக்குகள் நாம்தமிழர் கட்சிக்கு அதிகமாக கிடைத்துள்ளது.

கன்னியாகுமரி சட்டப்பேரவை தொகுதியில் 2016 சட்டப்பேரவை தேர்தலில் நாம் தமிழர் கட்சி 1,732 வாக்குகள் மட்டுமே பெற்றிருந்த நிலையில் தற்போது 14,200 வாக்குகளை பெற்றுள்ளது. இதுபோல் நாகர்கோவில் தொகுதியில் 2016 தேர்தலில் 1,855 வாக்குகள் பெற்றிருந்த நிலையில், தற்போது 10,797ஆக அதிகரித்துள்ளது. குளச்சல் தொகுதியில் கடந்தமுறை 2,281 வாக்குகளை பெற்ற நிலையில் தற்போது 18,202 வாக்குகளை பெற்றுள்ளது.

பத்மநாபபுரம் தொகுதியில் கடந்தமுறை வெறும் 826 வாக்குகளை பெற்றிருந்தது. இந்த தேர்தலில் 13,899 வாக்குகளை பெற்றுள்ளது. விளவங்கோடு தொகுதியில் கடந்த தேர்தலில் 734 வாக்குகளை பெற்றிருந்த நிலையில் தற்போது 12,692 வாக்குகளையும், கிள்ளியூர் தொகுதியில் கடந்தமுறை 1,328 வாக்குகள் பெற்ற நிலையில், தற்போது 14,821 வாக்குகளையும் பெற்றுள்ளது.

மேலும் கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் 58,593 வாக்குகளை நாம் தமிழர் கட்சி பெற்றுள்ளது. கடந்த 2019-ல் நடைபெற்ற மக்களவை தேர்தலில் அக்கட்சி 17,069 வாக்குகளையே பெற்றிருந்தது.நாம் தமிழ் கட்சியின் வாக்கு விகிதம் கடந்த 5 ஆண்டுகளில் பன்மடங்கு அதிகரித்திருப்பது அக்கட்சியினர் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x