Published : 02 May 2021 03:14 AM
Last Updated : 02 May 2021 03:14 AM

மர்மமாக உயிரிழந்த இளம்பெண்ணின் உறவினர்கள் மறியல் போராட்டம் :

தருமபுரி மாவட்டம் நாகதாசம் பட்டியில் மர்மமாக உயிரிழந்த இளம்பெண்ணின் உறவினர்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட் டனர்.

பென்னாகரம் வட்டம் நாகதாசம்பட்டியைச் சேர்ந்த கட்டிட மேஸ்திரி முருகன் (35). இவரது மனைவி லட்சுமி (31). இவர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பு மணமாகி உள்ளது. இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். தம்பதி இடையே அவ்வப்போது குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், கடந்த மாதம் 28-ம் தேதி லட்சுமி திடீரென மாயமானதாக அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர் 29-ம் தேதி இரவு முருகன் வீட்டருகே உள்ள வைக்கோல் போர் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. இதைக்கண்டு, அப்பகுதியில் இருந்தவர்கள் திரண்டு வந்து தீயை அணைத்துள்ளனர். தீ அணைக்கப்பட்ட நிலையில், மாயமானதாகக் கூறப்பட்ட லட்சுமியின் உடல் வைக்கோல் போரில் பாதி எரிந்த நிலையில் கிடப்பதைக் கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதையறிந்த லட்சுமியின் உறவினர்கள் விசாரித்ததில் தெரிந்த தகவல்களின் அடிப்படையில், ‘கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட தகராறின்போது முருகன் தாக்கியதில் லட்சுமி உயிரிழந்துள்ளார். உடனே சடலத்தை ஒருநாள் முழுக்க வைக்கோல் போரில் மறைத்து வைத்த முருகன் தன் மனைவி திடீரென மாயமானதாக தெரிவித்தார். மறு நாள் இரவில் வைக்கோல் போருக்கு அவரே தீ வைத்துள்ளார்.

அப்பகுதி மக்கள் திரண்டு தீயை அணைத்ததால், உடல் பாதி எரிந்த நிலையில் போருக்குள் லட்சுமியின் உடல் கிடந்தது தெரிய வந்தது. போர் முழுமையாக எரிந்திருந்தால் உடலும் எரிந்திருக்கும். இந்த தகவலை விசாரித்து தெரிந்து கொண்ட வகையில் புகார் அளிக்கிறோம். எனவே, லட்சுமியின் உயிரிழப்புக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டு பாப்பாரப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இந்நிலையில், லட்சுமியின் உயிரிழப்புக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என நேற்று நாகதாசம்பட்டி 3 ரோடு பகுதியில் தருமபுரி-பென்னாகரம் சாலையில் லட்சுமியின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

புகாரில் தொடர்புடைய வர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பாப்பாரப்பட்டி போலீஸார் உறுதி அளித்ததைத் தொடர்ந்து, சுமார் 1 மணி நேரத்துக்கு பின்னர் மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. அதைத் தொடர்ந்து, பிரேத பரிசோதனை முடிக்கப்பட்டு லட்சுமியின் சடலம் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த சம்பவங்களால் நாகதாசம்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x