

திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்களில் கரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 423 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. பாதிப்பை தடுக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத் துறை சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் முக்கிய பங்காக தடுப்பூசி செலுத்தும் பணிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஜனவரி மாதம் 16-ம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
முதற்கட்டமாக கரோனா முன்கள பணியாளர்களான மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள், வருவாய்த் துறையினர், போலீஸாருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்ட நிலையில், தற்போது 45 வயதுக்கு மேற்பட்ட பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மாவட்டத்தில் பல இடங்களில் தடுப்பூசி முதல் தவணை செலுத்தியவர்களுக்கு 2-ம் தவணை கிடைக்காமல் அவதிப்பட்டு வருவதாக புகார்கள் எழுந்துள்ளன. அதோடு புறநகர் பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசி செலுத்த வருவோர், தடுப்பூசி இல்லாமல் திரும்பி செல்லுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதுகுறித்து உடுமலைப்பேட்டையை சேர்ந்த பாலசுப்ரமணியம் கூறும்போது, “எனக்கு கடந்த மார்ச் 15-ம் தேதி முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டது. தற்போது 2-ம் தவணை ஏப்ரல் 15-ம் தேதி போடப்பட வேண்டும். இதுவரை போடப்படவில்லை. பலமுறை உடுமலை அரசு மருத்துவமனைக்கு சென்று, தடுப்பூசி இல்லாமல் ஏமாற்றத்துடன் திரும்பி வந்து விட்டேன்” என்றார்.
திருப்பூர் மாவட்டத்தில் பெரும்பாலான அரசு மருத்துவமனைகளில் தடுப்பூசி கையிருப்பு இல்லை. திருப்பூர் அரசு மருத்துவமனை, உடுமலை அரசு மருத்துவமனை, புறநகரில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் சிலவற்றில் கரோனா தடுப்பூசி இல்லை என சுவரொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன.
கோவை மாநகரில்