

திருநெல்வேலியில் வாக்கு எண்ணும் மையத்துக்கு செல்லும்அதிகாரிகள், வேட்பாளர்கள், முகவர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
தமிழக சட்டப் பேரவை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி வரும் 2-ம் தேதி நடைபெறுகிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் திருநெல்வேலி, பாளையங்கோட்டை, அம்பாசமுத்திரம், நாங்குநேரி, ராதாபுரம் ஆகிய 5 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரியில் நடைபெறுகிறது.
கரோனா பரவலை அடுத்து வாக்கு எண்ணும் மையத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளை தேர்தல் ஆணையம் விதித்துள்ளது. வாக்கு எண்ணிக்கை அலுவலர்கள், அதிகாரிகள், வேட்பாளர்கள், வேட்பாளர்களின் முகவர்கள், பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீஸார், செய்தி சேகரிக்கும் பத்திரிகையாளர்கள், ஊடகத்துறையினர் என்று அனைவரும் 72 மணிநேரத்துக்குமுன் கரோனா பரிசோதனை செய்து, நெகடிவ் சான்றிதழ் பெறுவது கட்டாயம் எனவும் அல்லது தடுப்பூசி இரண்டு டோஸ் போட்டிருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்துக்கு செல்லும் அதிகாரிகள், வேட்பாளர்கள், முகவர்கள் உள்ளிட்டோரில் தடுப்பூசிஇரண்டு டோஸ் போட்டுக் கொள்ளாதவர்களுக்கு கரோனா பரிசோதனை நேற்று மேற்கொள்ளப்பட்டது. இதற்காக திருநெல்வேலி மாநகராட்சி சார்பில் சிறப்புமுகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பாளையங்கோட்டையில் பேருந்து நிலையம் அருகே மாநகராட்சி திருமண மண்டபத்திலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும், டவுன் சாப்டர் மேல்நிலைப்பள்ளி வளாகத்திலும் கரோனா பரிசோதனை மற்றும் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டன.
பாளையங்கோட்டையில் நடைபெற்ற சிறப்பு முகாமை மாநகராட்சி நல அலுவலர் டாக்டர் சரோஜா, சுகாதார ஆய்வாளர்கள் நடராஜன், பெருமாள் ஆகியோர் கண்காணித்தனர்.
இதனிடையே வாக்கு எண்ணும் மையத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைக்காக வெப்பநிலை அளவிடும் கருவிகள், சானிடைசர் வழங்குதல் மற்றும் கிருமி நாசினிதெளிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தூத்துக்குடி
இதற்கான சிறப்பு முகாம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. காய்ச்சல் முகாம்களிலும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதற்கான முடிவுகள் இன்று (ஏப்.30)காலை கிடைக்கும். அதனை பொறுத்து அவர்கள் வாக்கு எண்ணும் மையத்துக்கு செல்வார்கள்.
கோவில்பட்டி
கரோனா பாதிப்பால் கோவில்பட்டியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் 188பேரும், தனியார் பாலிடெக்னிக் கல்லூரி கரோனா சிகிச்சை மையத்தில் 175 பேரும், கோவில்பட்டி சுகாதாரமாவட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் வீடுகளில் தனிமைப்படுத்தலில் 425 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 175 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதே போல், கயத்தாறு பேரூராட்சி பகுதியில் 11 பேருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டனர்.