கூத்தாண்டவர் கோயில் திருவிழா ரத்தானதால் - பட்டுக்கோட்டையில் திருநங்கைகள் சிறப்பு வழிபாடு : கரோனா தொற்று முழுவதும் நீங்க வேண்டுதல்
கரோனா பரவல் காரணமாக கூத்தாண்டவர் கோயில் திருவிழா ரத்து செய்யப்பட்டதால், பட்டுக்கோட்டையில் நேற்று திருநங்கைகள் சிறப்பு வழிபாடு நடத்தினர். அப்போது, கரோனா தொற்றிலிருந்து உலக மக்கள் விடுபட வேண்டிக் கொண்டனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கூவாகம் கிராமத்தில் உள்ள கூத்தாண்டவர் கோயிலில், ஆண்டுதோறும் சித்திரை மாத பவுர்ணமி தினத்தில், திருநங்கைகள் மணப்பெண் போல தங்களை அலங்கரித்துக்கொண்டு, அரவானை வணங்கி, கோயில் பூசாரியின் மூலம் தாலி கட்டிக்கொண்டு, இரவு முழுவதும் கும்மியடித்து ஆடிப்பாடும் நிகழ்வு நடைபெறுவது வழக்கம். கரோனா ஊரடங்கு காரணமாக, கடந்த ஆண்டு ரத்து செய்யப்பட்ட இந்த விழா, கரோனா 2-வது அலை காரணமாக நிகழாண்டும் ரத்து செய்யப்பட்டது.
இதையடுத்து, தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை பாளையம் பகுதியைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் நேற்று ஒரு திருநங்கையின் வீட்டு முன்பு கூடி, கரகம் போன்று வைத்து, கூத்தாண்டவரை நினைத்து வழிபாடு நடத்தி, தாலி கட்டிக்கொண்டனர். மேலும், கரோனா தொற்று முழுமையாக ஒழிய வேண்டும் என கூத்தாண்டவரிடம் வேண்டிக்கொண்டு, சிறப்பு வழிபாடு நடத்தினர். தொடர்ந்து, அப்பகுதி மக்களுக்கு கபசுர குடிநீரை வழங்கினர்.
பின்னர், செய்தியாளர்களிடம் திருநங்கை ஸ்ரேயா கூறியது: கரோனா தொற்று உலக மக்களைப் பெரிதும் அச்சுறுத்தி வருவதால், தொடர்ந்து 2-வது ஆண்டாக கூத்தாண்டவர் திருவிழா தடைபட்டுள்ளது. இதனால், கூத்தாண்டவரை நினைத்து வீட்டிலேயே வழிபட்டோம். இதில், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் குணமடைய வேண்டும். கரோனா விரைவில் முற்றிலுமாக ஒழிய வேண்டும் என வேண்டிக்கொண்டோம் என்றார்.
