

நாடு முழுவதும் மருத்துவ ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில், தூத்துக்குடி அரசுமருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள திரவ ஆக்சிஜன் கொள்கலன்களுக்கு, துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கரோனா தொற்றின் 2-வது அலை மிக வேகமாக பரவி வருகிறது. இதனால், தினமும்லட்சக்கணக்கான கரோனா நோயாளிகள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். ஒரேநேரத்தில் அதிகமான நோயாளிகள்வருவதால் நாடு முழுவதும் பலஇடங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தொடர்ந்து வெளியாகின்றன.
ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக நாட்டில் பல்வேறு பகுதிகளில் நோயாளிகள் உயிரிழந்த சம்பவங்களும் நடந்துள்ளன. கரோனா நோயாளிகளின் உறவினர்கள் ஆக்சிஜன் சிலிண்டர்களுக்காக தேடி அலையும் பரிதாப நிலையும் ஆங்காங்கே காணப்படுகிறது.
தமிழகத்தை பொறுத்தவரை ஆக்சிஜன் தட்டுப்பாடு இதுவரை ஏற்படவில்லை. மாநிலத்தில் உள்ளஅரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு தேவையான ஆக்சிஜன் கொள்கலன்களில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன. தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், 10 ஆயிரம் லிட்டர் மற்றும் 6 ஆயிரம்லிட்டர் கொள்ளளவு கொண்ட 2 திரவ ஆக்சிஜன் கொள்கலன்கள் உள்ளன.
திடீரென நேற்று காலை முதல்இவற்றுக்கு துப்பாக்கி ஏந்தியபோலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஆக்சிஜன் தட்டுப்பாடு தொடர்பாக சமூக வலை தளங்களில் பல்வேறு வதந்திகள் பரவி வருவதை கருத்தில் கொண்டு இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.