

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பண்டாரம்பட்டி கிராம மக்கள் நேற்று மீண்டும் போராட்டம் நடத்தினர்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக, அந்த ஆலையை சுற்றி உள்ள பண்டாரம்பட்டி, குமரெட்டியபுரம் உள்ளிட்ட கிராம மக்கள் கடந்த 2018-ம் ஆண்டு தொடர் போராட்டம் நடத்தினர்.
தற்போது நாடு முழுவதும் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில், ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. ஆலையைத் திறப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பண்டாரம்பட்டி கிராம மக்கள் சுமார் 20 பேர் நேற்று ஊரின் மையப்பகுதியில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த ஏடிஎஸ்பி இளங்கோவன், டிஎஸ்பிக்கள் பிரகாஷ், பொன்னரசு, வட்டாட்சியர் ஜஸ்டின் மற்றும் போலீஸார், சம்பவ இடத்துக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட வர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
மேலும் இரவு நேர ஊரடங்கு அமலில் இருப்பதால் 10 மணிக்கு மேல் போராட்டத்தை தொடரக் கூடாது என்று தெரிவித்தனர். இதனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் இரவு 10 மணி வரை போராட்டம் நடத்துவோம் என்றும், பின்னர் மறுநாள் காலையில் மீண்டும் போராட்டத்தை தொடர்வோம் என்றும் தெரிவித்துள்ளனர்.