

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தனியார் நிறுவனங்கள் பால் கொள்முதல் விலை குறைப்பு மற்றும் தீவனம் விலை உயர்வால் கால்நடை விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆவின் மற்றும் தனியார் நிறுவனங்கள் கால்நடை வளர்க்கும் விவசாயிகளிடம் பாலை கொள்முதல் செய்கின்றனர். பாலின் கொழுப்பு சத்து அளவைப் பொறுத்து கொள்முதல் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு கரோனா முழு ஊரடங்கின் போது தனியார் நிறுவனங்கள் பாலை கொள்முதல் செய்வது 50 சதவீதம் குறைத்துக் கொண்டதால், விவசாயிகள் பலர் பாலை விற்பனை செய்ய முடியாமல் குவாரிகளில் கொட்டினர். இந்நிலையில் தற்போது தனியார் நிறுவனங்கள் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.3.60 வரை குறைத்துள்ளதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக கிருஷ்ணகிரி அணை இடதுபுறக்கால்வாய் பாசனம் கால்வாய் நீட்டிப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் சிவகுரு கூறும்போது, தனியார் நிறுவனங்கள் பால் கொள்முதல் விலையை குறைத்துள்ளன. கடந்த மாதம் 4 சதவீதம் கொழுப்பு சத்து பால் லிட்டர் ரூ.30.60-க்கு கொள்முதல் செய்தனர். தற்போது ரூ.27 மட்டும் தான் வழங்குகின்றனர். கரோனா பரவலால் வெளி மாநிலங்களுக்கு பால் விற்பனை செய்வது குறைந்துவிட்டதாகவும், பால்கோவா தயாரிக்கும் நிறு வனங்கள் தங்களது தயாரிப்பினை நிறுத்திவிட்டதாகவும் கூறுகின் றனர்.
ஆனால் கால்நடைகளுக்கான தீவனத்தின் விலை ரூ.200 வரை அதிகரித்துள்ளது. இதனால் கால்நடை வளர்ப்பவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். எங்களிடம் பால் கொள்முதல் விலையை குறைத்தவர்கள், வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யப்படும் பால் விலையை குறைக்கவில்லை. எனவே, தனியார் நிறுவனங்கள் பால் கொள்முதல் விலையை குறைப்பை கைவிட வேண்டும் என்றார்.