Published : 27 Apr 2021 06:30 AM
Last Updated : 27 Apr 2021 06:30 AM
அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் புறநோயாளிகள் பிரிவை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தின் தலைவர் கே.செந்தில் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழகம் முழுவதும் தட்டுப்பாடு இல்லாமல் கரோனா தடுப்பூசிபோட நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்காக, போர்க்கால அடிப்படையில், 25 ஆயிரம் தன்னார்வலர்களை நியமித்து, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்களுடன் இணைந்து பணியாற்ற அறிவுறுத்த வேண்டும். அப்போதுதான், நோய் எதிர்ப்பு உருவாகி பரவலை ஓரளவு கட்டுப்படுத்த முடியும். மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு தேவையான ஆக்சிஜன் தடை இல்லாமல் கிடைக்க அதற்கான உட்கட்டமைப்பு வலுத்தப்படுத்த வேண்டும். அனைத்து மருத்துவமனைகளிலும் ஆக்சிஜன் பிளான்ட் அமைக்க வேண்டும். இதற்காக பயோ மெடிக்கல் பொறியாளர்களை பணியமர்த்தி உயிர்காக்கும் கருவிகளை பராமரிக்க வேண்டும்.
மருத்துவர்கள் செவிலியர்களின் பாதுகாப்புக்கு முகக் கவசம், முழு உடற்கவசம், கிருமிநாசினி போன்றவைகளை வழங்க வேண்டும். போதிய அளவிலான மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்களை நியமிக்க வேண்டும். தற்போதும், பல அரசு மருத்துவமனைகளில் கரோனா அல்லாத புறநோயாளிகள் பிரிவு,அவசரமில்லாத சாதாரண அறுவை சிகிச்சை உள்ளிட்டவை நடைபெறுகின்றன. இதனால், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் ஆக்சிஜன் போன்ற பயன்பாடு அத்தியாவசியமற்ற சேவைகளில் வீணாகிறது.
இவற்றை முற்றிலும் நிறுத்துவதின் மூலம் அனைவரையும் கரோனாவுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தலாம். மேலும், தொற்றை தடுக்க பணியாற்றி வரும் மருத்துவர்கள், செவிலியர்களுக்கு அரசு அறிவித்த நிவாரணங்களை வழங்குவதோடு, எங்களின் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT