மறைந்த நகைச்சுவை நடிகர் - விவேக்கின் குடும்பத்தினருக்கு நடிகர் விஜய் நேரில் சென்று ஆறுதல் :
மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக்கின் குடும்பத்தினருக்கு நடிகர் விஜய் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார்.
நடிகர் விவேக் கடந்த 17-ம் தேதி திடீர் மாரடைப்பால் காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி, முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள், ரஜினி, கமல் உள்ளிட்ட திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்தனர். அரசியல் கட்சியினர், நடிகர்கள், ரசிகர்கள் ஏராளமானோர் நேரில் சென்று விவேக் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பல்வேறு இடங்களில் பொதுமக்களும், ரசிகர்களும் தொடர்ந்து மரக்கன்றுகளை நட்டுவைத்து, அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
விவேக் மறைவின்போது, நடிகர் விஜய் படப்பிடிப்புக்காக ஜார்ஜியாவில் இருந்தார். கரோனா விதிமுறைகளால் அவர் உடனடியாக புறப்பட்டு வர முடியவில்லை.
இந்நிலையில், ஜார்ஜியாவில் இருந்து நேற்று முன்தினம் சென்னை திரும்பிய விஜய், நேற்றுகாலை விவேக் வீட்டுக்கு சென்று,அவரது குடும்பத்தினரை சந்தித்துஇரங்கலும், ஆறுதலும் தெரிவித்தார்.
விஜய்யுடன் எண்ணற்ற படங்களில் நடித்தவர் விவேக். விஜய்யின் ஆரம்பகால வளர்ச்சியில் நகைச்சுவை நடிகர் விவேக்குக்குபெரும் பங்கு உண்டு எனவும் சொல்லலாம். இருவரும்இணைந்து ‘குஷி’, ‘பிரியமானவளே’, ‘பத்ரி’, ‘ஷாஜகான்’, ‘தமிழன்’, ‘யூத்’ என பல படங்களில் நடித்துள்ளனர். கடந்த 2019-ல் வெளியான ‘பிகில்’ படத்திலும் இருவரும் இணைந்து நடித்தது குறிப்பிடத்தக்கது.
