Published : 27 Apr 2021 06:30 AM
Last Updated : 27 Apr 2021 06:30 AM

தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு :

தமிழகத்தில் ஒருசில இடங்களில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பிகார் முதல் தென் தமிழக கடலோர பகுதிவரை வளிமண்டல சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக இன்று மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்கள், கன்னியகுமாரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

28, 29, 30 தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் சேலம், தருமபுரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

கடலோர மாவட்டங்களில் காற்றில் ஈரப்பதம் (Relative Humidity) 50 முதல் 90 சதவீதம் வரை உள்ளதால் காற்றின் இயல்பான வெப்பநிலையானது 7 டிகிரி ஃபாரன்ஹீட் வரை அதிகமாக உயர வாய்ப்புள்ளது. அதன் காரணமாக பிற்பகல் முதல் காலை வரை புழுக்கமும், வழக்கத்துக்கு மாறாக அதிகமாக வியர்க்கவும் வாய்ப்புள்ளது.

26-ம் தேதி காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம் குன்னூரில் 3 செ.மீ, நீலகிரி குந்தா பாலம், கன்னியாகுமரி மாவட்டம் சிவலோகம் ஆகிய இடங்களில் தலா 2 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x