

கர்நாடக ஆழ்கடல் பகுதியில் படகு விபத்துக்குள்ளாகி மாயமான 11 மீனவர்களையும் விரைந்து மீட்க வலியுறுத்தி கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியரிடம், மீனவர் களின் குடும்பத்தினர் மனு அளித்த னர்.
கன்னியாகுமரி மாவட்டம் வள்ளவிளையைச் சேர்ந்த ஜோசப்பிராங்ளின்(46) என்பவரின் விசைப்படகில், அவர் உட்பட 11 மீனவர்கள் கடந்த 9-ம் தேதி தேங்காய்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்றனர். இந்த படகு கடந்த 24-ம் தேதி கர்நாடக மாநிலம் கார்வார் தெற்கு கடல் பகுதிக்கும், கோவாகடல் பகுதிக்கும் இடையில் கவிழ்ந்து உடைந்த நிலையில் கிடந்தது.
படகில் இருந்த மீனவர்கள் 11 பேரின் நிலை என்ன என்று தெரியாத நிலையில், மீனவர்களை தேடும் பணி நடைபெற்றது.
நேற்று காலையில் விமானம் மூலம் மீனவர்களை தேடும் பணி நடைபெற்றது.
இந்நிலையில், ஆழ்கடலில் படகு உடைந்து மாயமான மீனவர்கள் 11 பேரையும் விரைந்து மீட்க வலியுறுத்தி, நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்திடம், தெற்காசிய மீனவ தோழமை அமைப்பு பொதுச் செயலாளர் சர்ச்சில் தலைமையில் மீனவ பிரதிநிதிகள் மற்றும் மீனவர்களின் குடும்பத்தினர் மனு அளித்தனர்.
மீனவர்கள் மாயம் தொடர்பாக வள்ளவிளை பங்குத்தந்தை இல்லத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பங்குத்தந்தை ரிச்சர்டு சகரியாஸ் தலைமை வகித்தார். மீனவர்கள் சென்ற விசைப்படகில் கப்பல் மோதி தான் விபத்து நடந்திருக்க வேண்டும். எனவே, விபத்துக்கு காரணமான கப்பலை கண்டுபிடிக்க இந்தியகடற்படையினர் மற்றும் மீன்வளத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.