

குளத்தூர் அண்ணாநகர் காலனியைச் சேர்ந்தவர் முருகன் (51). இவர் குளத்தூர் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள அரசு மதுபானக்கடையில் மேற்பார்வையாளராக பணிபுரி கிறார்.
கடந்த 12-ம் தேதி மது விற்பனையில் கிடைத்த ரூ. 6,13,220 பணத்தை கீழவைப்பாற்றில் உள்ள வங்கியில் செலுத்துவதற்காக முருகன் தனது மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது, மோட்டார் சைக்கிள்களில் வந்த 3 மர்மநபர்கள் முருகனிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணத்தை பறித்துச் சென்றனர்.
தனிப்படையினர், சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். மதுரை, முடக்கு சாலை இந்திரா ராணி மெயின்ரோடு பகுதியைச் சேர்ந்த துரைக்கண்ணன் மகன் பாரத் (22), மதுரை மாவட்டம் சமயநல்லூர் பகுதியைச் சேர்ந்த கண்ணன் மகன் முத்துஇருள் (29) மற்றும் தூத்துக்குடி மில்லர்புரம் வள்ளலார் கோவில் தெருவைச் சேர்ந்த குமார் மகன் மணிகண்டன் என்ற சுருட்டைமணி (23) ஆகியோர், முருகனிடம் பணத்தை பறித்தது தெரியவந்தது.
பாரத் மற்றும் மணிகண்டன் என்ற சுருட்டைமணி ஆகிய இருவரையும் தனிப்படை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 3 மோட்டார் சைக்கிள்களும், ஒரு காரும் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வழக்கில் தொடர்புடைய, முத்துஇருள் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டு வில்லிபுத்தூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.