

பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்தில் உள்ள நெகமம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளதால் சுகாதாரத் துறையினர் தீவிர நோய் தடுப்பு நடவடிக் கைகளை மேற்கொண்டு வருகின்றனர்
நெகமத்தில் உள்ள மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு உட்பட்ட கிராமங்களில், கரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. என்.சந்திராபுரம்,நெகமம், கொண்டேகவுண்டன் பாளையம், ஆவலப்பம்பட்டி,ராசக்கா பாளையம், அனுப்பர்பாளையம் உள்ளிட்ட பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்தில் உள்ள கிராமங்களில் 140 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.
இதில் 118 பேர் குணமடைந்து வீடு திரும்பி விட்டனர்.22 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 29 பேர் கரோனா தொற்று பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியைக் கடைபிடித்தல், கிருமி நாசினியால் கைகளை சுத்தம் செய்தல்உள்ளிட்ட பாதுகாப்பு நடைமுறைகளைக் கடைபிடிக்காமல் தேர்தல் பிரச்சாரத்தில் பொதுமக்கள் அதிகளவில் பங்கேற்றது தொற்று பரவ முக்கியக் காரணியாக அமைந்துள்ளது.
நாள்தோறும் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் பொள்ளாச்சி வடக்கு ஒன்றியப் பகுதிகளில் சுகாதாரத் துறையினர் சளி பரிசோதனை, முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்என நோய் தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
மேலும் முகக்கவசம் அணிதல் கைகளை கழுவுதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் உள்ளிட்ட விழிப்புணர்வையும் மக்கள் மத்தியில் சுகாதாரத் துறையினர் ஏற்படுத்தி வருகின்றனர்.