

மாநகராட்சிப் பகுதிகளில் கரோனா தொற்றுக்கு உள்ளான பகுதிகளை தனிமைப்படுத்த பொதுமக்கள் ஒத்துழைப்பது இல்லை என அதிகாரிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
கரோனா தொற்று பரவலைக்கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்.
ஆனால் பெரும்பான்மையான மக்களிடம் அந்த மனப்பக்குவம் இல்லை. கிழக்கு மண்டலத்துக்குட்பட்ட விளாங்குறிச்சி குருசாமி நகரில் 4 வீடுகளில் அடுத்தடுத்து கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது.
3 வீடுகளில் பாதிப்பு இருந்தாலே அந்த வீதியை தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கவேண்டும். 4 வீடுகளில் பாதிப்பு இருந்தும் அப்பகுதியை தனிமைப்படுத்த மக்கள் ஒத்துழைக்க மறுத்துவிட்டனர்.
வேலைக்கு செல்வது உள்ளிட்ட காரணங்களை கூறி எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பாதிக்கப்பட்ட வீடுகளை ஒருங்கிணைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ளவர்களுக்கு லேசான தொற்று இருந்தால் முதலில் தெரியாது. அவர்கள் வெளியில் செல்லும்போது நிச்சயமாக அடுத்தவர்களுக்கு பரவ வாய்ப்புள்ளது. அதனால் 14 நாட்கள் அவர்கள் வெளியில் செல்லக்கூடாது, மற்றவர்களுக்கு பரவக் கூடாதுஎன்பதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
மேலும், வீடுகளில் தனிமைப் படுத்தப்பட்டுள்ளவர்களும் சில நேரங்களில் வரைமுறைகளை மீறி வீடுகளை விட்டு வெளியில் செல்வதாக புகார்கள் வருகின்றன. 24 மணி நேரமும் அவர்களை கண்காணிக்க முடியாது. மக்களுக்கே பொறுப்பு வர வேண்டும். அப்போதுதான் தொற்று பரவலை தடுக்க முடியும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.