Published : 26 Apr 2021 03:18 AM
Last Updated : 26 Apr 2021 03:18 AM

புதிய கல்விக் கொள்கை மொழிபெயர்ப்பில் - தமிழ் மொழியை புறக்கணிப்பதா? : மத்திய அரசுக்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம்

சென்னை

புதிய கல்விக் கொள்கை மொழிபெயர்ப்பில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசுக்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக அவர்கள் நேற்று வெளியிட்ட அறிக்கைகளில் கூறியிருப்பதாவது:

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி: புதிய தேசிய கல்விக் கொள்கையை இந்தி உள்ளிட்ட 17 மொழிகளில் மொழி பெயர்த்த மத்திய பாஜக அரசு, தமிழைப் புறக்கணித்தது ஏன்? திருவள்ளுவர், அவ்வையார், பாரதி ஆகியோரை மேற்கோள் காட்டிய பிரதமர் நரேந்திர மோடி, தமிழ் மொழியை வஞ்சிப்பது ஏன்?

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி: மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தது முதல் தமிழ் புறக்கணிக்கப்பட்டு இந்தி, சம்ஸ்கிருதத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. புதிய கல்விக் கொள்கை மொழிபெயர்ப்பில் தமிழ் புறக்கணிக்கப்பட்டுள்ளது கடும் கண்டனத்துக்குரியது. தமிழில் வெளிவந்தால் புதிய கல்விக் கொள்கைக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு வெடிக்கும் என்ற அச்சத்தின் காரணமாக மேற்கொள்ளப்பட்ட சூழ்ச்சியா என்ற கேள்வி எழுகிறது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் கே.பாலகிருஷ்ணன்: தமிழ் மொழி வளர்ச்சிக்கு குறைவான நிதி ஒதுக்கீடு, தேசிய தேர்வுகளில் புறக்கணிப்பு என தொடர்ந்து தமிழ் மொழிக்கு விரோதமான போக்கையே மத்திய பாஜக அரசு கடைப்பிடித்து வருகிறது. இந்தச் சூழலில், தேசிய கல்விக் கொள்கையை தமிழில் மொழி பெயர்ப்பு செய்யாதது தமிழ் மொழியையும், தமிழக மக்களையும் புறக்கணிக்கும் செயலாகும். தேசிய கல்விக் கொள்கைக்கு எதிரானப் போராட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தொடர்ந்து உறுதியுடன் முன்னெடுக்கும்.

பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி: புதிய தேசிய கல்விக் கொள்கை 17 மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிடப்பட்டுள்ள நிலையில், தமிழில் வெளியிடப்படாதது வருத்தம் அளிக்கிறது. புதிய கல்விக் கொள்கைஇந்தியாவின் அதிகாரப்பூர்வ ஆவணமாக ஏற்றுக் கொள்ளப்பட்ட நிலையில், அதை அனைத்து மொழிகளிலும் வெளியிடுவதுதான் நியாயமானதாக இருக்கும். மத்திய அரசின் தமிழ் மொழிக்கு எதிரான இந்த அணுகுமுறை தவறானது. இந்தத் தவறை மத்திய அரசு உடனடியாக சரி செய்ய வேண்டும்.

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன்: தேசிய கல்விக் கொள்கையை பல மொழிகளில் வெளியிட்டிருக்கும் மத்தியஅரசு, தமிழை மட்டும் புறக்கணித்திருப்பது ஏற்புடையதல்ல. மேடைப் பேச்சில் திருக்குறள், பாரதியார் கவிதைகளைக் குறிப்பிட்டு தமிழ்மீது பற்று இருப்பதுபோல காட்டிக்கொள்வதெல்லாம் வெறும் நாடகமே. நிஜத்தில் தமிழ்ப் பண்பாட்டின் மீது படையெடுப்பதும், உரிமைகளை வேரறுப்பதுமே தொடர்கிறது.இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x