

கரோனா பாதிப்பு அதிகரித்துள்ள போதும் தடுப்பூசிக்கான மூலப் பொருட்களைத் தர அமெரிக்க அரசு மறுத்துவிட்ட நிலையில், தடுப்பூசி உள்ளிட்ட சீனாவின் உதவிகளை இந்தியா மறுக்கக் கூடாதுஎன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக நேற்று வெளியிட்ட அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:
கரோனா தொற்று 2-வது அலை கட்டுக்கடங்காமல் நாடு முழுவதும் மிகத் தீவிரமாக பரவி,கோரத் தாண்டவம் ஆடி வருகிறது. தடுப்பூசி தயாரிக்கப்பட்டுவிட்ட நிலையில், இந்தியாவில் அனைத்து மக்களுக்கும் செலுத்தி பாதுகாப்பை ஏற்படுத்தவாய்ப்பு உருவாகியுள்ளது. ஆனால், மோடி அரசு கடைப்பிடித்த தவறானக் கொள்கையால் தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டு, சிக்கல் அதிகரித்துள்ளது.
தடுப்பூசி தயாரிப்பதற்கான மூலப்பொருள்களை அமெரிக்காவிடமிருந்து நாம் கேட்டுப் பெறவேண்டிய நிலைமை உள்ளது. மத்திய அரசு வற்புறுத்தியும் தடுப்பூசிக்கான மூலப் பொருட்களைத் தர அமெரிக்க அரசு மறுத்துவிட்டது. அதேநேரத்தில் சீன அரசிடமிருந்து இந்தியாவுக்கு கரோனா தடுப்பூசி உள்ளிட்ட உதவிகளுக்கான அறிவிப்பு வந்திருப்பது நல்ல தகவலாகும். அமெரிக்காவுடனான நட்புறவு கெட்டுவிடுமே என்ற அச்சத்தில், ஆபத்துகால உதவியை மறுக்கும் முடிவை மத்திய அரசு எடுத்துவிடக் கூடாது. உலகம் முழுவதும், எங்கேயிருந்து உதவிகள் கிடைத்தாலும் அதைப் பெற்று நாட்டு மக்களைக் காப்பது மட்டுமே நம்முடைய ஒரே குறிக்கோளாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.