

திருப்பத்தூர் மாவட்டத்தில் 4 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை மையத்தில் பணியாற்ற உள்ள 204 பணியாளர்களுக்கான பயிற்சி வகுப்பு திருப்பத்தூர் தூய நெஞ்சக்கல்லூரி கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலருமான சிவன் அருள் தலைமை வகித்து பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்து பேசும்போது, ‘‘வாணியம்பாடி ஜெயின் மகளிர் கல்லூரியில் வாக்கு எண்ணும் மையம் அமைக்கப்பட்டுள்ளது. வரும் மே-2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
வாக்கு எண்ணும் மையத்தில் 14 மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தல் நடத்தும் அலுவலர், உதவிதேர்தல் நடத்தும் அலுவலருக்கு தனியாக ஒரு மேஜை போடப் பட்டுள்ளது.
ஒவ்வொரு மேஜைக்கும் ஒரு வாக்கு எண்ணும் மேற்பார்வையாளர், உதவியாளர் ஒருவர், நுண் பார்வையாளர் ஒருவர், கட்டுப்பாடு கருவியை பாதுகாப்பு அறையில் இருந்து கொண்டு வந்து மேற்பார்வையாளரிடம் அளிக்க ஒவ்வொரு மேஜைக்கும் ஒரு அலுவலக உதவியாளர் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
பணிநியமன ஆணைகள்
ஒவ்வொரு மேஜையிலும் வாக்கு எண்ணிக்கைக்காக ஒதுக்கீடு செய்யப்படும் கட்டுப்பாட்டு கருவிகள் சுற்றுவாரியாக வரிசை எண்கள் அச்சடித்து ஒட்டப்பட்டுள்ளதை உறுதி செய்து கொள்ள வேண்டும். அன்று காலை 7.55 மணிக்கு தேர்தல் நடத்தும் அலுவலரின் தலைமையில் அனைவரும் வாக்குப்பதிவின் ரகசியம் தொடர்பான உறுதிமொழி ஏற்க வேண்டும்.
காலை 8 மணிக்கு முதலில் தபால் வாக்கு எண்ண வேண்டும். அதன்பிறகு அரை மணி நேரம் கழித்து வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளை எண்ண வேண்டும். வாக்குச்சாவடிக்குரிய அசல் படிவம் 17-சி மேஜைக்கு அனுப்பப்படும். இந்த நிகழ்வுகள் வீடியோ மூலம் பதிவு செய்யப்படும்.
ஒவ்வொரு சுற்றிலும் பதிவான வாக்குகளின் விவரங்கள், வேட்பாளர் பெற்ற வாக்குகள் விவரம் ஆகியவற்றை மேஜை மேற்பார்வையாளர் படிவம் 17-சி பகுதி 2-ல் கார்பன் இணைத்து 2 நகல்களின் பூர்த்தி செய்து அதை உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு ஒவ்வொரு பணிகளையும் வாக்கு எண்ணும் பணியாளர்கள் கவனமுடன் செய்ய வேண்டும்.
கரோனா தடுப்பூசி
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் தங்கைய்யாபாண்டியன், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் வந்தனாகர்க் (திருப்பத்தூர்), கிருஷ்ணமூர்த்தி (ஆம்பூர்), காயத்ரிசுப்பிரமணி (வாணியம்பாடி), லட்சுமி (ஜோலார்பேட்டை), ஆட்சியரின் நேர்முக உதவியாளர் வில்சன்ராஜசேகர், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.