

திருப்பூர் பனியன் நிறுவனத்தில் இருந்து மீட்கப்பட்ட ஒடிசா மாநில தொழிலாளர்கள் 19 பேர், நேற்று சொந்த ஊருக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
திருப்பூர் தண்ணீர்பந்தல் காலனி பகுதியிலுள்ள பனியன் நிறுவனத்தில், வடமாநில பெண் தொழிலாளர்கள் சிலர் கட்டாயப்படுத்தி அடைத்து வைக்கப்பட்டிருப்பதாக வருவாய்த் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, திருப்பூர் கோட்டாட்சியர் ஜெகநாதன் தலைமையிலான வருவாய்த் துறையினர் மற்றும் போலீஸார் சென்று விசாரித்தனர். இதில், ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 19 இளம் பெண்கள் சொந்த ஊருக்கு செல்ல விருப்பம் தெரிவித்திருந்தனர். ஆனால், அவர்களை நிறுவனம் அனுப்பிவைக்காமல் இருப்பது தெரியவந்தது. அவர்களை மீட்டு, அப்பகுதியிலுள்ள தனியார் மண்டபத்தில் தங்கவைத்தனர்.
இந்நிலையில், ஒடிசா மாநிலத்துக்கு செல்லும் ரயிலில் நேற்று மதியம் அவர்கள் பாதுகாப்பாக அனுப்பிவைக்கப்பட்டனர். சமூக நலத் துறை அதிகாரிகள் மற்றும் போலீஸார் அவர்களை கண்காணித்தனர்.
மீட்கப்பட்ட அனைவரும் 23 வயதுக்கு உட்பட்ட இளம்பெண்கள் என்பதும், தொடர்புடைய பனியன் நிறுவனத்தில் குறைந்த சம்பளத்தில் தொழில் பயிற்சிக்கு வந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும், நிறுவனம் உரிய சம்பளம் அளிக்காமலும், உடைமைகளை அறையில் பூட்டி வைத்திருந்தது தொடர்பாகவும் ஒடிசா மாநில தலைமைச் செயலாளருக்கு தகவல் அளித்துள்ளனர். இதையடுத்து, தமிழக தலைமைச் செயலாளரை அவர் தொடர்புகொண்டு, அதன்மூலமாக மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகே இவர்கள் மீட்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதுதொடர்பாக 15 வேலம்பாளையம் போலீஸார் விசாரிக்கின்றனர்.