

கிருஷ்ணகிரி நகராட்சி பகுதிகளில் கரோனா விதிமுறைகளை பின்பற்றாத கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
கிருஷ்ணகிரி நகராட்சி ஆணையர் சந்திரா தலைமையிலான குழுவினர் நகராட்சிக்கு உட்பட்ட சென்னை சாலை, காந்தி சாலை, சேலம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வர்த்தக நிறுவனங்களில் நேற்று திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது, தொற்று தடுப்புக்கான அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றாத கடைகளுக்கு ரூ.3,000 அபராதம் விதிக்கப்பட்டது.
அனைத்து வர்த்தக நிறுவனங்களும் கரோனா தடுப்பு விதிமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும். ஒவ்வொரு நிறுவனத்துக்கு வருகை தரும் வாடிக்கையாளர்களை கரோனா விதிகளை பின்பற்றச் செய்வதும் அந்தந்த நிறுவனங்களையே சாரும். விதி மீறுவோர் மீது நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.