

மக்களின் வருமானத்துக்கு இடையூறு இல்லாதபடி ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டுமென, கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.
திருப்பூர் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் அலுவலகத்தில், தீரன் சின்னமலையின் 266-வது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதில் பங்கேற்று அவர் பேசும்போது, "சுதந்திர போராட்ட வீரரும், கொங்கு நாட்டை சேர்ந்தவருமான தீரன் சின்னமலை உருவப்படத்தை சட்டப்பேரவையில் வைக்க தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறோம். மே 2-ம் தேதிக்கு பிறகு அவரது படம் கொண்டுவரப்படும். நடிகர் விவேக்கின் மறைவு வருத்தம் அளிக்கிறது. கரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்த பிறகு, கரோனா தடுப்பூசி போட அறிவுறுத்தி வருகின்றனர். மத்திய அரசு இதை கண்டுகொள்ளாமல் இருந்ததே இதற்கு காரணம். கரோனா முதல் அலையின்போது வடமாநிலம் சென்ற தொழிலாளர்கள், இன்னும் ஊர் திரும்பவில்லை. அதற்குள் 2-ம் அலை பாதிப்பு அதிகரித்துள்ளது. இதனால் திருப்பூரில் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.
நூல் விலை உயர்வால் பின்னலாடைத் தொழில் ஏற்கெனவே பாதிக்கப்பட்டுள்ளது. மக்களின் வருமானத்துக்கு இடையூறு இல்லாதபடி ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும். வாக்கு எண்ணும் மையத்தில் அதிமுக சார்பில் எந்த நபரும் கண்காணிப்பு பணியில் ஈடுபடவில்லை. இது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது" என்றார்.