

பஞ்சு ஏற்றுமதியை 3 மாதங்களுக்கு மத்திய அரசு தடை செய்ய வேண்டுமென வலியுறுத்தி, திருப்பூர் சைமா சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதுதொடர்பாக தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்கத் (சைமா) தலைவர் வைகிங் ஏ.சி.ஈஸ்வரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "நாடு முழுவதும் கரோனா இரண்டாம் அலையால் பலரும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். ஆனால், பின்னலாடைத் தொழில் நகரமான திருப்பூருக்கு நூல் விலையிலும் இரண்டாவது அலை வீசி வருகிறது. அனைத்து பனியன் சங்கங்களும், தொழிற்சங்கங்களும் இணைந்து போராடியதால் நூல் விலை குறையும் என எதிர்பார்த்தோம்.
ஆனால், நூற்பாலைகள் இதனை பொருட்படுத்தாமல் மீண்டும் நூல் விலையை உயர்த்தின. இந்நிலையில், சைமா சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திருப்பூரில் நடைபெற்றது. அதில், மத்திய அரசு பஞ்சு ஏற்றுமதியை 3 மாத காலத்துக்கு முழுமையாக தடை செய்ய வேண்டும். உள்நாட்டு நூல் உற்பத்தியை உயர்த்தவேண்டும்.
நூல் ஏற்றுமதியை 50 சதவீதம் உடனடியாக குறைத்து,உள்நாட்டு பனியன் உற்பத்தியாளர்களுக்கு தட்டுப்பாடு இல்லாமலும்,விலை உயர்வு இல்லாமலும் நூல் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த தீர்மானங்கள் குறித்து மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.