Published : 18 Apr 2021 03:18 AM
Last Updated : 18 Apr 2021 03:18 AM
புதுக்கோட்டை அரசு மகளிர் கலைக்கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தை அதிமுக வேட்பாளர்களான சி.விஜயபாஸ்கர் (விராலிமலை), பி.கே.வைரமுத்து (திருமயம்), வி.ஆர்.கார்த்திக் தொண்டைமான் (புதுக்கோட்டை), தர்ம.தங்கவேல் (ஆலங்குடி), ஜெயபாரதி(கந்தர்வக்கோட்டை), மு.ராஜநாயகம்(அறந்தாங்கி) ஆகியோர் நேற்று பார்வையிட்டனர்.
பின்னர், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “நடிகர் விவேக் தடுப்பூசி போட்டுக் கொண்டதையும், அவர் உயிரிழந்ததையும் தொடர்புபடுத்த வேண்டாம் என்பதே எனது கருத்து. இதுதொடர்பாக அரசு சுகாதாரத் துறைச் செயலாளர் மற்றும் மருத்துவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.
நாளொன்றுக்கு 2 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. கரோனா தடுப்பூசியால் எந்தஒரு பக்கவிளைவும் இல்லை எனஏற்கெனவே தெளிவுபடுத்தப் பட்டுள்ளது.
உலகளவில் கரோனா வேகம் அதிகரித்து வரும் நிலையில் மக்களுக்கு நம்பிக்கைதான் அவசியம். எனவே, தடுப்பூசியால் ஏதேனும் பிரச்சினைகள் ஏற்படுமா என்ற கேள்வியையே தவிர்ப்பது நல்லது. அரசின் மீதும், தடுப்பூசி மீதும், மருத்துவர்கள் மீதும் நம்பிக்கைதான் அவசியம்.
தடுப்பூசி எடுத்துக் கொண்ட ஒரு சிலருக்கு கரோனா தொற்றுஏற்பட்டாலும், உயிரிழப்புகளை தடுக்க முடியும். களத்தில் பணிபுரிய நாங்கள் தயாராக உள்ளோம். தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகள் காரணமாகத்தான் ஆய்வு உள்ளிட்ட பணிகளை முழுமையாக செய்ய முடியவில்லை.தமிழகத்துக்கு ரெம்டெசிவர் மருந்தை தடையில்லாமல் வழங்க வேண்டும் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளேன்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT