உடல்வலி, தலைவலி, கண் எரிச்சல் இருந்தால் உடனடி பரிசோதனை தேவை : குமரி மாவட்ட ஆட்சியர் வலியுறுத்தல்

ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து  சுகாதாரத்துறையினர் மற்றும் அதிகாரிகளுடன் மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த் ஆலோசனை மேற்கொண்டார்.
ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத்துறையினர் மற்றும் அதிகாரிகளுடன் மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த் ஆலோசனை மேற்கொண்டார்.
Updated on
1 min read

கன்னியாகுமரி மாவட்டத்தில் போதிய அளவில் கரோனா தடுப்பூசி இருப்பு வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த் தெரிவித்தார்.

ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத்துறையினருடன் ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கன்னியாகுமரி மாவட்டத்தில் மொத்தம் 581 கரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில்282 பேர் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பிற அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 216 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 58 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

700 படுக்கைகள் தயார்

மாவட்டத்தில் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் சுமார் 5.9 லட்சம் பேர் உள்ளனர். இவர்களில் 85 ஆயிரம்பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தினமும் 4 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. முதல்கட்ட தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் 8 வாரங்களுக்குள் இரண்டாம் கட்ட தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. முதல்கட்ட தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் அச்சப்படத் தேவையில்லை.கரோனா தடுப்பூசி போதியளவு இருப்பு வைக்க நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டுள்ளது.

தற்போது பரவி வரும் இரண்டாம் அலை கரோனா இளைய தலைமுறையினரையும், சர்க்கரை நோய் உள்ளவர்கள், கர்ப்பிணி பெண்களை அதிகமாக பாதிக்கிறது. எனவே, பொதுமக்கள் காய்ச்சல், தலைவலி, உடல்வலி, கண் எரிச்சல், உடல் அரிப்பு போன்ற அறிகுறிகள் தென்பட்டால் அலட்சியப்படுத்தாமல் உடனடியாக அருகாமையிலுள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று சோதனை மேற்கொள்ள வேண்டும். முகக்கவசம் அணிவதையும், சமூக இடைவெளியையும் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்றார்.

ஆய்வில் மாவட்ட வருவாய் அலுவலர் ரேவதி, நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித், ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் சுகந்தி ராஜகுமாரி, கண்காணிப்பாளர் அருள்பிரகாஷ் மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

மாவட்டத்தில் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் சுமார் 5.9 லட்சம் பேர் உள்ளனர். இவர்களில் 85 ஆயிரம் பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in