

தமிழகத்தில் சென்னை, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கரோனா பரவலைக் கட்டுப்படுத்த சுகாதாரத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கரோனா பரவல் காரணமாக, தமிழகத்தில் உள்ள புராதானக் கோயில்கள், தொல்லியல் சின்னங்கள் மூடப்பட்டு, பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. கோவை மாவட்டம் செட்டிபாளையத்தில் மண்டபக்காடு என்ற பெருங்கற்கால பொருட்கள் மற்றும் அது தொடர்பாக ஆய்வு செய்யும் இடம் உள்ளது.
மத்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இம்மையத்தில், தினமும் பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில் கரோனா பரவல் அச்சம் காரணமாக மேற்கண்ட மண்டபக்காடு மையத்தில் பொதுமக்களுக்கு நேற்று முதல் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதேபோல், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் புராதனக் கோயில்களான திருமுருகன்பூண்டி திருமுருகநாத சாமி கோயில் மற்றும் பெரியாயிபாளையம் சுக்ரீஸ்வரர் கோயில் ஆகியவற்றில் நேற்று முதல் பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது, மே 15-ம் தேதி வரை இந்த தடை அமலில் இருக்கும் என கோயில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.