கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள கிருஷ்ணகிரியில் மக்கள் ஆர்வம் : தட்டுப்பாட்டை போக்க வலியுறுத்தல்

கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள கிருஷ்ணகிரியில் மக்கள் ஆர்வம் :  தட்டுப்பாட்டை போக்க வலியுறுத்தல்
Updated on
1 min read

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள மக்கள் ஆர்வம் காட்டி வரும் நிலையில், தடுப்பூசி தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

கிருஷ்ணகிரியில் கடந்த ஜனவரி 16-ம் தேதி முதல் தடுப்பூசிப்பணி, சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் வயது சார்ந்த, மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி போடப்பட்டு வருகின்றன. கடந்த ஏப்ரல் 1-ம் தேதி முதல் 45 வயதுக்கு, மேற்பட்டோருக்கு தடுப்பூசிபோடும் பணி விரிவுப்படுத்தப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 45 வயதிற்கு மேற்பட்டோர் சுமார் 5 லட்சம் பேர் உள்ளனர். கடந்த 15-ம் தேதி வரை 1 லட்சத்து 6 ஆயிரத்து 404 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர்.

நேற்று முன்தினம் ஒரே நாளில் 3,900 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதனால் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வருபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், நேற்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம் மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார மையங்களில், பிற்பகலுக்கு மேல் தடுப்பூசி இல்லாததால், ஊசி போட வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். கரோனா தடுப்பூசி தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதுகுறித்து சுகாதாரத் துறையினரிடம் கேட்டபோது, இருப்பு உள்ளவரை தினந்தோறும் தடுப்பூசி, போடப்பட்டு வருகிறது. நாளை (இன்று) சென்னையிலிருந்து மேலும் 5 ஆயிரம் தடுப்பூசிகள் வருகிறது. மக்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் தடுப்பூசி போடப்படும் என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in