

திருப்பூர் அருகே கிடங்கில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட 1,275 கிலோ புகையிலைப் பொருட்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
திருப்பூர் நெருப்பெரிச்சல் கே.எஸ்.ஆர்.நகரை அடுத்த ஜி.என்.கார்டன் பகுதியில், தடை செய்யப்பட்ட புகையிலை, குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக அனுப்பர்பாளையம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, காவல் ஆய்வாளர் ஆனந்த் தலைமையிலான போலீஸார், ஜி.என்.கார்டன் பகுதியில் உள்ள கிடங்கில் சோதனை மேற்கொண்டபோது புகையிலைப் பொருட்களை பதுக்கி விற்பனை செய்யப்படுவது தெரியவந்தது.
இதுதொடர்பாக, திருப்பூர் ராக்கியாபாளையத்தில் வசிக்கும் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த கெவில் பட்டேல் (22) என்பவரை பிடித்து விசாரித்ததில், 4 மாதங்களுக்கு முன்பு கிடங்கை வாடகைக்கு எடுத்து, கடைகளுக்கு புகையிலைப் பொருட்களை விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீஸார், ரூ.7 லட்சம் மதிப்பிலான 1,275 கிலோ புகையிலைப் பொருட்கள் மற்றும் கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.