

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே வேலாயுதம்பாளையம் ஊராட்சி பூலக்காட்டுப்பாளையத்தில் தனியார் நூற்பாலை இயங்குகிறது. இதில் நாள்தோறும் 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். வழக்கம்போல நேற்று நூற்பாலை இயங்கி வந்தது. திடீரென மாலை நூற்பாலையில் ஏற்பட்ட மின்கசிவால் இயந்திரங்கள், பஞ்சு மூட்டைகள் உள்ளிட்டவை முழுவதும் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. ஆலையில் பணிபுரிந்த யாருக்கும் காயம் இல்லை.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு பாலசுப்பிரமணியம் (அவிநாசி), பாஸ்கர் (திருப்பூர்) ஆகிய இரு தீயணைப்பு நிலைய அலுவலர்கள் தலைமையிலான வீரர்கள் சென்று, ஒரு மணி நேரத்துக்கு மேலாக போராடி தீயை அணைத்தனர். இருப்பினும் பஞ்சு, பனியன் வேஸ்ட், நூல், இயந்திரங்கள் உள்ளிட்ட பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானது. 7-க்கும் மேற்பட்ட வெளி மாநிலத் தொழிலாளர்கள் உயிர் தப்பினர். அவிநாசி போலீஸார் விசாரிக்கின்றனர்.