Published : 13 Apr 2021 03:14 AM
Last Updated : 13 Apr 2021 03:14 AM

கலைநிகழ்ச்சிகள் நடத்த அனுமதி கோரி நாடகக் கலைஞர்கள் ஆர்ப்பாட்டம், மறியல், மனு :

கரோனா ஊரடங்கில் தளர்வு அளித்து, திருவிழாக்களில் இசை நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி அளிக்கக் கோரி நாட்டுப்புறக் கலைஞர்கள் சார்பில் தஞ்சாவூரில் ஆர்ப்பாட்டமும், திருவாரூர், திருச்சி, அரியலூர், கரூரில் மனு அளித்தலும், புதுக்கோட்டையில் சாலை மறியலும் நடைபெற்றன.

தஞ்சாவூர் ரயிலடியில் தஞ்சாவூர் மாவட்ட அனைத்து மேடை மற்றும் நாட்டுப்புற கிராமியக் கலைஞர்கள் சங்க கூட்டமைப்பு சார்பில், பாடகி சின்னப்பொண்ணு குமார் தலைமையில் பறை, மேளம் இசைத்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில், கரோனா ஊரடங்கை காரணம் காட்டி கோயில் திருவிழாக்களுக்கு தடை விதிக்கப்பட்டதால், இசை நிகழ்ச்சிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால், அதை நம்பி யுள்ள கலைஞர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் பாதிக்கப்பட்டுள்ளதால், ஊரடங்கில் தளர்வு அளித்து இசை நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி அளிக்க வேண்டும். வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட கலைஞர்களுக்கு உரிய நிவாரண நிதியை வழங்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

இதே கோரிக்கையை வலியுறுத்தி, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தமிழ்நாடு கிராமிய கலைஞர்கள், நடன நையாண்டி மேள சங்கம் மற்றும் அனைத்து கலைச் சங்கங்களின் பொதுச் செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மன்னார்குடி இயல், இசை நாடக நடிகர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கத்தினர், அதன் தலைவர் தங்க கிருஷ்ணமூர்த்தி தலைமையில், அரிச்சந்திரன், சிவன், பார்வதி, ராஜபார்ட், கிருஷ்ணன், எமதர்மர் உள்ளிட்ட கதாபாத்திரங்களின் வேடமணிந்து வந்து, ஆட்சியர் சாந்தாவிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

இதே கோரிக்கையை வலியுறுத்தி திருச்சியில் ஆட்சியர் எஸ்.திவ்யதர்ஷினியிடம் தமிழ்நாடு மேடை மெல்லிசைக் கலைஞர்கள் சங்கத்தினர் கோரிக்கை மனு அளித்தனர்.

தமிழக நாட்டுப்புற இசைக் கலை பெருமன்றத்தின் அரியலூர் மாவட்டத் தலைவர் மா.கிருஷ்ணமூர்த்தி, செயலாளர் கி.மூர்த்தி, பொருளாளர் மு.நாகராஜன் உள்ளிட்டோர், ஆட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள குறைதீர் பெட்டியில் கோரிக்கை மனுவை அளித்தனர்.

கரூர் நாடக நடிகர் சங்கம் சார்பில் தாரை, தப்பட்டை உள்ளிட்ட பல்வேறு இசைக் கருவிகள் முழங்க, நாரதர், எமதர்மன் உள்ளிட்ட பல்வேறு வேடங்கள் அணிந்து வந்து, கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மக்கள் குறைதீர் பெட்டியில் நேற்று கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இதேபோல, கரூர் நாடகச் சங்க நாடகக் கலைஞர்களும் மனு அளித்தனர்.

புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகம் அருகே நாட்டுப்புற கலைஞர்கள் சங்க மாவட்டச் செயலாளர் புதுக்கோட்டை ஆக்காட்டி ஆறுமுகம் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

இதற்கு போலீஸார் எதிர்ப்பு தெரிவித்ததால், கலைஞர்கள் அனைவரும் சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர், ஆட்சியர் பி.உமா மகேஸ்வரியிடம் கோரிக்கை மனுவை அளித்துவிட்டு கலைந்து சென்றனர்.

இந்த போராட்டத்தில், நாடகக் கலைஞர்கள், மேடைக் கலைஞர்கள், மெல்லிசை கலைஞர்கள், நடன நாட்டிய கலைஞர்கள், கிராமிய கரகாட்ட கலைஞர்கள், பேண்டு வாத்தியக் கலைஞர்கள், கிராமிய நையாண்டி கலைஞர்கள், ஒலி- ஒளி அமைப்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x