

உரம் விலை உயர்வை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என தமிழக விவசாயிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக கிருஷ்ண கிரியைச் சேர்ந்த தமிழக விவசாயி கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் ராமகவுண்டர் வெளியிட்டுள்ள அறிக்கை:
மத்திய அரசு ஏப்ரல் 1-ம் தேதி முதல் விவசாயத்துக்கு பயன்படுத்தும் ரசாயன உரங்களுக்கான விலையை 40 சதவீதம் முதல் 60 சதவீதம் வரை உயர்த்தியிருப்பது விவசாயிகளை மீண்டும் நசுக்கும் செயலாகும். இதை தமிழக விவசாயிகள் சங்கம் கண்டிக்கிறது. விவசாய விலைப் பொருட்களுக்கு இதுவரை அரசுகள் 0.1 முதல் 0.2 சதவீதத்திற்கு மேல் உயர்த்தியதே இல்லை. விவசாயமே கட்டுபடி ஆகாத நிலையில், ஒரு மூட்டை ரூ.1200 முதல் ரூ.1300 வரை விற்று வந்த டி.ஏ.பி., 50 கிலோ 1,900 ரூபாயும், என்.பி.கே. 12–32–16 1800 ரூபாயும், கலப்பு உரங்கள் என்.பி.கே. 10–26–20 1,775 ரூபாயும் விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோல் மற்ற உரங்களுக்கும் விலை உயர்வு அறிவித்துள்ளது விவசாயி களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மத்திய அரசு உடனடியாக உரவிலை உயர்வை திரும்பப்பெற வேண்டும். இல்லையென்றால் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் போராட்டங்கள் நடத்தப்படும்.