கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடந்த - மக்கள் நீதிமன்றத்தில் : ரூ.3.70 கோடி இழப்பீடு :

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடந்த  -  மக்கள் நீதிமன்றத்தில் : ரூ.3.70 கோடி இழப்பீடு  :
Updated on
1 min read

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று நடந்த மக்கள் நீதிமன்றத்தில் 668 வழக்குகளில் ரூ.3 கோடியே 70 லட்சத்துக்கு இழப்பீடு வழங்கப்பட்டது.

சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, நீதிமன்றங்களில் தேங்கி கிடக்கும் வழக்குகளை விரைந்து முடிப்பதற்காக நேஷனல் லோக் அதாலத் எனப்படும் தேசிய மக்கள் நீதிமன்றம் நேற்று நடந்தது. அதன்படி, கிருஷ்ணகிரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும், ஓசூர், ஊத்தங்கரை, போச்சம்பள்ளி, தேன்கனிக்கோட்டை நீதிமன்ற வளாகங்களில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் மக்கள் நீதிமன்றம் நேற்று நடந்தது.

கிருஷ்ணகிரியில் நடந்த மக்கள் நீதிமன்றத்துக்கு மாவட்ட முதன்மை நீதிபதி கலைமதி தலைமை வகித்தார். நிரந்தர மக்கள் நீதிமன்ற தலைவர் நீதிபதி அறிவொளி, விரைவு மகளிர் நீதிமன்ற நீதிபதி அன்புசெல்வி, சிறப்பு மாவட்ட நீதிபதி மணி, கூடுதல் மாவட்ட நீதிபதி விஜயகுமாரி, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு செயலாளர் தமிழ்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மக்கள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சிவில் வழக்குகள், காசோலை வழக்குகள், மோட்டார் வாகன விபத்து இழப்பீடு கோரும் வழக்குகள், வங்கிகள் மற்றும் தொழிலாளர் நல வழக்குகள், நிலுவையில் உள்ள பரஸ்பரம் பேசி தீர்த்துக் கொள்ளக் கூடிய குற்றவியல் வழக்குகள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

மாவட்டம் முழுவதும் 10 அமர்வுகள் அமைக்கப்பட்டு 2 ஆயிரத்து 143 வழக்குகள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இதில் 668 வழக்குகளில் ரூ.3 கோடியே 70 லட்சத்து 42 ஆயிரத்து 26-க்கு இழப்பீடு வழங்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in