Published : 09 Apr 2021 03:12 AM
Last Updated : 09 Apr 2021 03:12 AM

சென்னை பல்கலைக்கழக - பட்டமளிப்பு விழாவில் 86 பேருக்கு தங்கப்பதக்கம் : ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வழங்கினார்

சென்னை பல்கலைக்கழகத்தின் 163-வது பட்டமளிப்பு விழாவில் 86 மாணவர்களுக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தங்கப்பதக்கங்களையும், பட்டங்களையும் வழங்கினார்.

சென்னை பல்கலைக்கழகத்தின் 163-வது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக நூற்றாண்டு விழா கலையரங்கத்தில் நேற்று காலை நடைபெற்றது. விழாவுக்கு தமிழக ஆளுநரும் பல்கலைக்கழக வேந்தருமான பன்வாரிலால் புரோஹித் தலைமை தாங்கி பட்டங்களை வழங்கினார். விழாவில் 3 பேருக்கு கவுரவ டாக்டர் பட்டமும், 683 பேருக்கு முனைவர் பட்டமும், சிறந்த ஆய்வு அறிக்கைக்காக 7 பேருக்கும், தனிச் சிறப்புடன் முதல் நிலைத் தகுதி சான்றிதழ் 86 பேருக்கும் வழங்கப்பட்டன. விழாவில் 872 பேருக்குப் பட்டம், பரிசு மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன. 2019-20-ம் கல்வியாண்டில் நேரடியாக படித்து முடித்த ஒரு லட்சத்து 24 ஆயிரத்து 862 பேர், தொலைத்தூரக் கல்வி நிறுவனத்தில் படித்த 12 ஆயிரத்து 11 பேர் என மொத்தம் ஒரு லட்சத்து 36 ஆயிரத்து 745 பேர் பட்டம் பெற்றனர்.

சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட சென்னை ஐஐடி இயக்குநர் பாஸ்கர் ராமமூர்த்தி பேசியதாவது: 150 ஆண்டுகளுக்கும் மேலாக நமது முன்னோடிகள் சென்னை பல்கலைக்கழகத்துக்கு வழங்கிய பங்களிப்பால் ஏராளமான மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர். கரோனா நோய் பரவலுக்கிடையே இணையவழி மூலமாக சென்னை பல்கலைக்கழகம் மாணவர்களுக்குச் சிறப்பான கல்வியை வழங்கி வருகிறது.

கல்வி தொடர்பாக புதிய தேசிய கல்விக் கொள்கையில் தொலைநோக்கு திட்டம் இருப்பதாகப் பரவலாக ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. நமது கல்வி நிறுவனங்களில் உள்ள ஆங்கிலேயே கல்வி முறையை அகற்றிவிட்டு, தன்னாட்சிக்கு மாற்ற வேண்டும் என்று புதிய கல்விக் கொள்கை பரிந்துரைக்கிறது.

இதில் நாட்டின் ஜிஇஆர்-ஐ 50 சதவீதமாக உயர்த்துவது, விருப்ப பாடத் தேர்வு உள்ளிட்டவை அடங்கும். ஒரே மாணவர் இரு வேறு கல்வி நிறுவனங்களில் இரு வேறு பாடங்களைப் பயிலும் வாய்ப்பையும் கல்விக் கொள்கை ஏற்படுத்திக் கொடுக்கிறது. இதன்மூலம் மாணவர்களின் கல்வித் திறன் பல பரிணாமங்களில் வெளிப்படும்.

நமது நாட்டில் இருக்கும் பல்கலைக்கழகங்கள் இளநிலை பட்டப்படிப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. பெரும்பாலான பல்கலைக்கழகங்கள் முதுநிலை மற்றும் ஆராய்ச்சி படிப்புகளுக்கு மட்டுமே அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றன. இதை வரும் காலங்களில் மாற்றியமைக்கப் பல்கலைக்கழகங்கள் முன்வரவேண்டும். நோய் பரவல் காலங்களில் இணையவழி கல்வி இன்றியமையாததாக இருந்து வருகிறது. கல்வி கற்பதற்கு இருந்த புவியியல் சார்ந்த தடைகள் இணையவழி கல்வி மூலம் அகற்றப்பட்டுள்ளன. வரும் காலங்களில் இணையவழி கல்வி மீது கூடுதல் அக்கறை செலுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக, துணைவேந்தர் எஸ்.கெளரி வரவேற்று ஆண்டறிக்கை சமர்ப்பித்தார். விழாவில் பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) என்.மதிவாணன், தேர்வுக்கட்டுப்பாட்டு அதிகாரி கே.பாண்டியன் மற்றும் பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள், பெற்றோர் கலந்து கொண்டனர்.

நமது கல்வி நிறுவனங்களில் உள்ள ஆங்கிலேயே கல்வி முறையை அகற்றிவிட்டு, தன்னாட்சிக்கு மாற்ற வேண்டும் என்று புதிய கல்விக் கொள்கை பரிந்துரைக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x