

விளங்காமுடி ஏரியில் மதகுகளை அடைத்து பாசனத்துக்கு தண்ணீர் திறப்பதை தடுப்பதாக, மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் மனு அளித்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் ஒன்றியம் விளங்காமுடி ஊராட்சி கோடிப்புதூர் கிராம மக்கள், மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டியிடம் மனு ஒன்றை அளித்தனர். அம்மனுவில் கூறியிருப்பதாவது:
பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டின் கீழ், 90 ஏக்கர் பரப்பளவில் உள்ள விளாங்கமுடி ஏரிக்கு, கிருஷ்ணகிரி அணையில் இருந்து தண்ணீர் வருகிறது. ஏரியின் கீழ் 200 ஏக்கருக்கு மேல் தென்னை, வாழை, நெல் உள்ளிட்டவை சாகுபடி செய்யப்படுகிறது. ஏரியில் இருந்து பாசனத்துக்கு தேவைப்படும்போது மதகுகள் வழியாக தண்ணீர் திறந்துவிடப்படுவது வழக்கம். தற்போது கோடைகாலம் தொடங்கி உள்ள நிலையில், தண்ணீர் தேவை அதிகரித்துள்ளது.
இந்நிலையில் பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிட, ஏரியில் மீன் வளர்க்க குத்தகை எடுத்தவர்கள் மறுத்து தகராறில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், மதகுகளில் கல், மண் கொட்டி அடைத்து வைத்துள்ளனர். எனவே, பாசனத்துக்கு தடையின்றி தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.