Published : 08 Apr 2021 03:12 AM
Last Updated : 08 Apr 2021 03:12 AM

தென்னை வேர் வாடல் நோயை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் : தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் தகவல்

கோவை

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கோவை மாவட்டம் பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தேங்காய் மற்றும் இளநீர் தமிழ்நாடு முழுவதும் விற்பனை செய்யப்படுவதோடு, பிற மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. தற்போது தென்னை மரங்களை மிகவும் கொடிய நோயான ‘வேர் வாடல் நோய்’ தாக்கி, விளைச்சலையும் மற்றும் மரங்களையும் பாதித்து வருவது விவசாயிகளிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென்னை வேர்வாடல் நோயின் தோற்றம் மற்றும் பரவுதல் குறித்து, பொள்ளாச்சி தாலுகாவில் உள்ள 32 கிராமங்களில் பயிரிடப்பட்டுள்ள தென்னை மரங்களை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் முதுகலை மாணவர்கள் அடங்கிய குழுவினர் ஆய்வு செய்தனர். ஆய்வின் முடிவாக நோய் பாதிப்பானது 65.82 சதவீதம் வரை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. பெரும்பான்மையான கிராமங்களில் 20 சதவீதத்துக்கும் குறையாமல் இந்நோய் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

இலை மட்டைகள் கீழ்நோக்கி வளைந்து விலா எலும்பு போன்று காணப்படுதல், இலைகள் மஞ்சள் நிறமாகவும் மற்றும் ஓரங்கள் கருகுவதும் இந்நோயின் மிக முக்கிய அறிகுறிகளாகும். இதனால் இலைகளின் எண்ணிக்கை குறைந்து, குட்டையாகவும், மெலிந்தும் விடுவதுடன், மட்டைகள் மற்றும் தேங்காய் பருப்புகளின் தடிமன் குறைதல் இந்நோயின் பிற அறிகுறிகளாகும். நோயின் தன்மையை பொறுத்து வேர்அழுகல் 12 முதல் 90 சதவீகிதம் வரை காணப்படும். நோய் தாக்கப்பட்ட மரங்களில் பூங்கொத்து மலர்தல் மிக தாமதமாகும். பாளை சிறுத்தும், வளர்ச்சி குன்றியும், பாளை வெடிக்காமல் கருகியும், பூங்காம்புகளில் நுனியிலிருந்து கருகுதலும் காணப்படும். இந்நோயால் குரும்பை அதிகமாக உதிர்ந்தும் தரமற்ற சிறிய காய்களை உருவாக்கியும் அதிக மகசூல் இழப்பு ஏற்படுகிறது.

இந்நோயை குறைந்த அளவு அல்லது ஆரம்ப நிலையில் பாதிப்புக்கு உள்ளான மரங்களை வெட்டி அகற்ற வேண்டும். ஒரு மரத்துக்கு ஆண்டுக்கு 50 கிலோ தொழு உரம், பேசில்லஸ் சப்டிலஸ் 100 கிராம் மற்றும் வேப்பம் புண்ணாக்கு 5 கிலோ இட வேண்டும். வட்டப்பாத்தியை தென்னை மட்டைகளைக் கொண்டு மூடாக்கு அமைக்க வேண்டும். ஒருங்கிணைந்த உர மேலாண்மை முறைகளை மேற்கொண்டும் நல்ல விளைச்சலை பெறலாம்.

இந்நோயுடன் சேர்த்து வரும் இலை அழுகல் நோயைக் கட்டுப்படுத்த முற்றிலும் பாதிக்கப்பட்ட மட்டைகளை அகற்றி அழிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட அழுகிய பகுதிகளை வெட்டி அப்புறப்படுத்தி விட்டு அந்த இடத்தில் ஹெக்சகோனசோல் மருந்து 2 மில்லியை 300 மி.லி. தண்ணீரில் கலந்து குருத்தில் ஊற்ற வேண்டும் அல்லது மேன்கோசெப் மருந்தை 0.3 சதவீதம் என்ற அளவில் தெளிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x