Published : 08 Apr 2021 03:12 AM
Last Updated : 08 Apr 2021 03:12 AM

கோவையில் அரசுப் பேருந்து மோதி உயிரிழந்த - இளைஞரின் குடும்பத்துக்கு ரூ.19.61 லட்சம் இழப்பீடு : விபத்து இழப்பீடு வழக்குகள் சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

கோவையில் அரசுப் பேருந்து மோதி உயிரிழந்த இளைஞரின் குடும்பத்துக்கு ரூ.19.61 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்கு மோட்டார் வாகன விபத்து இழப்பீடு வழக்குகள் சிறப்பு சார்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவை காட்டூர் செல்லப்பகவுண்டர் தெருவைச் சேர்ந்தவர் ஆர்.கார்த்திக் (31). இவர் தனது இருசக்கர வாகனத்தில் கடந்த 2015 ஜூன் 10-ம் தேதி காரமடை-திம்மப்பாளையம் சாலையில் சென்றபோது பின்னால் அதிவேகமாக வந்த அரசுப் பேருந்து மோதியது. இதில், கார்த்திக்கின் தலை, மூக்கு, கை, கால்களில் படுகாயம் ஏற்பட்டது. தொடர் மருத்துவ சிகிச்சையில் இருந்துவந்த அவர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.

கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் 10 ஆண்டுகள் முதுநிலை விற்பனையாளராக கார்த்திக் பணிபுரிந்து வந்துள்ளார். மாதம் ரூ.25 ஆயிரம் சம்பளம் பெற்று வந்துள்ளார். எனவே, கார்த்திக்கை நம்பி இருந்த அவரது தாயின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டது.

இதையடுத்து, அரசு போக்குவரத்துக்கழகம் ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிடக்கோரி கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள மோட்டார் வாகன விபத்து இழப்பீடு வழக்குகள் சிறப்பு சார்பு நீதிமன்றத்தில் கார்த்திக்கின் தாய் செல்லம்மாள் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த சார்பு நீதிமன்ற நீதிபதி கே.முனிராஜா, "மருத்துவ சாட்சியத்தின் அடிப்படையில் கார்த்திக்கின் மரணம் விபத்தால் ஏற்பட்ட காயத்தின் தொடர்விளைவால் ஏற்பட்டுள்ளது உறுதியாகிறது. எனவே, வருமான இழப்பு, சொத்து இழப்பு, மருத்துவ செலவு, இறுதி சடங்குகளுக்கான செலவு என மொத்தம் ரூ.19.61 லட்சத்தை 7.5 சதவீத வட்டியுடன் 30 நாட்களுக்குள் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக்கழகம் வழங்க வேண்டும். தீர்ப்புத்தொகையில் 60 சதவீதத்தை மனுதாரர் நேரடியாக எடுத்துக்கொள்ளலாம். மீதமுள்ள தொகையை ஏதேனும் ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் 3 ஆண்டுகளுக்கு வைப்புத்தொகையாக செலுத்திவிட்டு, 3 ஆண்டுகளுக்குப்பிறகு அதை முழுமையாக எடுத்துக்கொள்ளலாம். அதுவரை வைப்புத்தொகைக்கான வட்டியை மூன்று மாதங்களுக்கு ஒருமுறை அவர் பெற்றுக்கொள்ளலாம்” என உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x