சேலம் ஜாகீர் அம்மாப்பாளையம் - வாக்குச்சாவடி மையத்துக்கு தவறுதலாக வந்த காரால் குழப்பம் : அதிகாரியின் விளக்கத்தால் நீண்ட நேர பதற்றத்துக்கு தீர்வு

சேலம் மேற்கு தொகுதிக்கு உட்பட்ட ஜாகீர் அம்மாப்பாளையம் வாக்குச்சாவடி மையத்தில் வாக்குப்பதிவு முடிந்த பின்னர், வாக்குப்பதிவு மின்னணு இயந்திரங்களுடன் வந்த கால் டாக்ஸி தொடர்பாக தேர்தல் நடத்தும் அலுவலரிடம், திமுக மத்திய மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் விளக்கம் கேட்டார்.படம்: எஸ்.குரு பிரசாத்
சேலம் மேற்கு தொகுதிக்கு உட்பட்ட ஜாகீர் அம்மாப்பாளையம் வாக்குச்சாவடி மையத்தில் வாக்குப்பதிவு முடிந்த பின்னர், வாக்குப்பதிவு மின்னணு இயந்திரங்களுடன் வந்த கால் டாக்ஸி தொடர்பாக தேர்தல் நடத்தும் அலுவலரிடம், திமுக மத்திய மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் விளக்கம் கேட்டார்.படம்: எஸ்.குரு பிரசாத்
Updated on
1 min read

சேலம் ஜாகீர் அம்மாப்பாளையம் வாக்குச்சாவடி மையத்துக்கு தவறுதலாக வந்த காரால் பதற்றம் ஏற்பட்டது. இதனால், சீல் வைக்கப் பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையத்துக்கு கொண்டு செல்வதில் தாமதம் ஏற்பட்டது.

சேலம் மேற்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட ஜாகீர் அம்மாப்பாளையம் அரசினர் மேல்நிலைப் பள்ளி வாக்குச் சாவடி மையத்தில், வாக்குப்பதிவு நாளான நேற்று முன்தினம் 16 வாக்குச்சாவடிகள் செயல்பட்டன. இங்கு வாக்குப்பதிவு இரவு 7.30 மணியளவில் முடிந்தது.

வாக்குப்பதிவு இயந்திரங் களுக்கு, ‘சீல்’ வைக்கப்படாமல் இருந்த நிலையில், வாக்குச் சாவடி மையத்துக்குள், ‘தேர்தல்’ என எழுதப்பட்ட அறிவிப்புடன் கால் டாக்ஸி வந்தது.

காரில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் இருந்தன. இதை பார்த்த வாக்குச்சாவடியில் இருந்தவேட்பாளர்களின் முகவர்கள் அதிர்ச்சியடைந்தனர். அது தொடர்பாக விளக்கம் கேட்டு காரை முற்றுகையிட்டனர்.

அதேநேரம், வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாற்றப்படுவதாக தவறான தகவல் அப்பகுதியில் பரவியதால் இரவு 9 மணியளவில் வாக்குச்சாவடி மையத்துக்கு வெளியே திமுக உள்ளிட்ட கட்சியினர் திரண்டனர். இதனால், அங்கு பதற்றம் நிலவியது.

தகவல் அறிந்து அங்கு சென்ற சேலம் மாநகர துணை ஆணையர் சந்திரசேகரன் தலைமையில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மேலும், தகவல் அறிந்து அங்கு வந்த சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளர் ராஜேந்திரன், தேர்தல் நடத்தும் அலுவலர் சத்தியபால கங்காதரனிடம் காரில் வந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் தொடர்பாக விளக்கம் கேட்டார்.

தொடர்ந்து பதற்றம் நிலவிய தால் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையத்துக்கு எடுத்துச் செல்வதில் காலதாமம் ஏற்பட்டது.

விசாரணைக்கு பின்னர் காரில் இருந்தவை அவசர தேவைக்காக வாக்குச்சாவடிகளுக்கு தேவைப் படும்போது வழங்குவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட வாக்குப் பதிவு செய்யப்படாத கூடுதல் இயந்திரங்கள் எனவும், அவை வட்டாட்சியர் அலுவலகத்துக்கு எடுத்துச் செல்வதற்கு பதிலாக இங்கு தவறுதலாக கொண்டு வரப்பட்டவை என தேர்தல் அலுவலர்கள் விளக்கினர்.

இதையடுத்து, காரில் இருந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படாதவையா என்பதை அரசியல் கட்சியினர் முன்னிலையில் சரிபார்க்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த குழப்பம் காரணமாக இந்த வாக்குச்சாவடி மையத்தில் இருந்து சீல் வைக்கப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையத்துக்கு நேற்று அதிகாலை 2.30 மணிக்கு மேல் கொண்டு செல்லப்பட்டன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in