Published : 08 Apr 2021 03:13 AM
Last Updated : 08 Apr 2021 03:13 AM

மக்கள் இரு மடங்கு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் - கரோனாவை தடுக்க தீவிர நடவடிக்கை அவசியம் : தமிழக அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள்

பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் தினசரி கரோனா பரவல் எண்ணிக்கை, எவரும் நினைத்துப் பார்க்காத வகையில் 3,645 ஆக உயர்ந்துள்ளது. கரோனா பரவலின் வேகம் பல மடங்கு அதிகரித்துள்ள நிலையில், அதை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசு தீவிரப்படுத்த வேண்டியதும், அத்தகைய நடவடிக்கைகளுக்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டியதும் அவசியமாகும்.

கடந்த ஆண்டு தினசரி கரோனா பரவல் 562-ல் இருந்து 3,645 ஆக அதிகரிக்க 56 நாட்கள் ஆகின. இப்போது 30 நாட்களிலேயே இந்த அளவுக்கு அதிகரித்துள்ளது. 2-வது அலையில் கரோனா பரவல் வேகம் இரு மடங்கு அதிகரித்துள்ளது. அனைவரும் இரு மடங்கு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதையே இது காட்டுகிறது.

கரோனா பரவல் கட்டுப்பாடுகள் பெருமளவில் தளர்த்தப்பட்ட நிலையில், மக்கள் குறைந்தபட்ச பாதுகாப்பு விதிகளைக்கூட கடைப்பிடிக்கவில்லை. திருமணம் போன்ற நிகழ்வுகளில் பங்கேற்பவர்கள், திரையரங்கு, வணிக வளாகங்களுக்கு செல்பவர்கள், பேருந்து, ரயில்களில் பயணம் செய்பவர்கள் உட்பட யாரும் முறையாக முகக் கவசம் அணிவது இல்லை. கரோனா பரவல் வேகம் அதிகரித்து, நிலைமை இந்த அளவுக்கு மோசமானதற்கு அதுவே காரணம்.

கரோனா பரவல் உச்சத்தை தொட்டுள்ள நிலையில், அதன் வேகத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவதுதான் அரசின் முதல் கடமையாக இருக்க வேண்டும்.

ஒருபுறம் 45 வயதை கடந்த அனைவருக்கும் தடுப்பூசி, மறுபுறம் கரோனா பாதுகாப்பு விதிகளை கடுமையாக கடைப்பிடிப்பதன் மூலம் நோய் பரவல் வேகத்தை கட்டுப்படுத்துவது என்ற இரு முனை அணுகுமுறையை தமிழக அரசு கடைப்பிடிக்கிறது. அரசின் நடவடிக்கைகளுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

பொது இடங்களில் கரோனா பாதுகாப்பு விதிகளை கடைப்பிடிக்காதவர்களுக்கு அதிகபட்சமாக ரூ.5,000 வரை அபராதம், சிறை தண்டனை என்பதுபோல கடும் நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும். இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x