தேர்தல் பணியில் தன்னார்வலர்களாக ஈடுபட்ட - முதன்முறை வாக்காளர்கள் வாக்களிக்க முடியாமல் ஏமாற்றம் : முறையாக அஞ்சல் வாக்குகள் வழங்கவில்லை என குற்றச்சாட்டு

தேர்தல் பணியில் தன்னார்வலர்களாக ஈடுபட்ட -  முதன்முறை வாக்காளர்கள் வாக்களிக்க முடியாமல் ஏமாற்றம் :  முறையாக அஞ்சல் வாக்குகள் வழங்கவில்லை என குற்றச்சாட்டு
Updated on
1 min read

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி தொகுதியில் தேர்தல் பணியில் தன்னார்வலர்களாக ஈடுபட்ட முதன்முறை வாக்காளர்களுக்கு முறையாக அஞ்சல் வாக்குகள் வழங்கப்படாததால், வாக்களிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தஞ்சாவூர், திருவையாறு, கும்பகோணம், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி, திருவிடைமருதூர், பாபநாசம் ஆகிய 8 தொகுதிகளில், மொத்தம் 2,886 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. நேற்று முன்தினம் நடைபெற்ற வாக்குப்பதிவின்போது, ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி மூலம் கல்லூரி மாணவர்கள் தலா 2 பேர் வீதம் தன்னார்வலர்களாக பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இவர்கள் வாக்குச்சாவடிக்கு வரும் வாக்காளர்களை முகக்கவசம் அணிந்து வர அறிவுறுத்துதல், கைகளை சுத்தம் செய்ய சானிடைசர், கையுறை வழங்குதல், உடல் வெப்பநிலை கண்டறிதல், முதியோருக்கு உதவுதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டனர். இப்பணியில் ஆண், பெண் இருபாலரும் ஈடுபட்டனர்.

இவர்களுக்கு அரசின் சார்பில் 3 வேளை உணவு, ரூ.250 ஊக்கத்தொகை மற்றும் ஆட்சியர் அலுவலகம் மூலம் சான்றிதழ் ஆகியவை வழங்கப்பட்டன.

இந்நிலையில், பேராவூரணி தொகுதியில் தன்னார்வலர்களாகப் பணியாற்றிய நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு அஞ்சல் வாக்குகள் (படிவம் 12-ஏ) வழங்கப்படாததால், அவர்கள் வாக்களிக்க முடியாமல் போய்விட்டதாக புகார் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து தன்னார்வலர்களாக பணியாற்றிய கல்லூரி மாணவர்கள் சிலர் கூறியபோது, “முதல் முறையாக வாக்களிக்க தயாராக இருந்த நாங்கள், தேர்தல் பணியில் தன்னார்வலர்களாக எங்களை ஈடுபடுத்திக்கொண்டோம். நாங்கள் வசிக்கும் பகுதியில் இல்லாமல், அதே தொகுதியில் வேறு வாக்குச்சாவடிகளில் பணியாற்றியதால், எங்களால் நேரடியாக வாக்களிக்க முடியவில்லை. எங்களுக்கு அஞ்சல் வாக்குகள் அனுமதிக்கப்பட்டிருந்தன.

ஆனால், எங்களில் பலருக்கு அஞ்சல் வாக்குகளை அதிகாரிகள் முறையாக வழங்காததால், வாக்களிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்துள்ளோம்.” என்றனர்.

இதுகுறித்து இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி மாவட்டச் செயலாளர் முத்துக்குமார் கூறியபோது, “மாவட்டத்தில் உள்ள மற்ற அனைத்துத் தொகுதிகளிலும் தன்னார்வலர்களில் பெரும்பான்மையானோர் வாக்களித்துவிட்டனர். ஆனால், பேராவூரணி தொகுதியில் மட்டும் அஞ்சல் வாக்குகள் முறையாக வழங்கப்படவில்லை. இதுதொடர்பாக ஆட்சியரிடம் முறையிட்டுள்ளோம்” என்றார்.

இதுகுறித்து ஆட்சியர் ம.கோவிந்தராவ் கூறியபோது, “எந்தெந்த தொகுதியில், எத்தனை தன்னார்வலர்கள் வாக்களிக்கவில்லை என விசாரிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கை வந்ததும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in