Published : 08 Apr 2021 03:14 AM
Last Updated : 08 Apr 2021 03:14 AM

வாக்கு எண்ணும் மையத்துக்கு வந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் - கோணம் பொறியியல் கல்லூரியில் 3 அடுக்கு பாதுகாப்பு :

கன்னியாகுமரி மாவட்டத்தில் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு இயந்திரங்கள் கோணம்அரசு பொறியியல் கல்லூரியில் தனித்தனி அறைகளில் வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டது. வாக்கு எண்ணும் மையத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி மக்களவை இடைத்தேர்தல், கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல், பத்மநாபபுரம், விளவங்கோடு, கிள்ளியூர் ஆகிய 6 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான பொதுத்தேர்தல் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. 2,234 வாக்குச்சாவடிகளிலும் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் உள்ள 15,71,651 வாக்குகளில் 10,81,258 வாக்குகள் பதிவாகியிருந்தன. இது 68.8 சதவீதம். வாக்குப்பதிவு முடிந்த பின் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கட்சி முகவர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டு, நாகர்கோவில் கோணத்தில் உள்ள வாக்கு எண்ணும் மையமான அரசு பொறியியல் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டன.

விளவங்கோடு, பத்மநாபபுரம் சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வாக்கு பெட்டிகள் மட்டும் கோணம் தொழில்நுட்ப கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டன. வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் தொகுதி வாரியாக பிரித்து தனித்தனி அறைகளில் வைத்து சீல் வைக்கப்பட்டது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளின் முன்பு துணை ராணுவம் மற்றும் போலீஸார் துப்பாக்கி ஏந்தியவாறு 24 மணி நேர பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறையின் நுழைவு வாயில் மற்றும் வளாகம் உட்பட 50-க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கேமராபொருத்தப்பட்டு போலீஸார் கண்காணித்து வருகின்றனர்.

கோணம் அரசு பொறியியல் கல்லூரி முன்பும், 1 கிலோ மீட்டர் சுற்றளவுக்கும் துணை ராணுவத்தினர் மற்றும் போலீஸார் 3 அடுக்கு பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். வாக்கு எண்ணும் நாளான மே 2-ம் தேதி வரை பாதுகாப்பு தொடரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x