Published : 07 Apr 2021 03:16 AM
Last Updated : 07 Apr 2021 03:16 AM

வாக்குச்சாவடி மையங்களில் மாலை 6 மணிக்கு மேல் - கவச உடையுடன் வாக்களித்த கரோனா நோயாளிகள் :

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி நேற்று நடைபெற்ற வாக்குப்பதிவின்போது மாலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை, கரோனா நோயாளிகள் உரிய பாதுகாப்பு கவச உடையணிந்து வந்து வாக்களித்தனர்.

நாடு முழுவதும் கரோனா தொற்று அதிகரித்து வரும் சூழலில், வாக்குப்பதிவின்போது கரோனா பரவலைத் தடுக்கும் வகையில், இந்திய தேர்தல் ஆணையம் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டது. வழக்கமாக 6 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடையும்நிலையில், கரோனா நோயாளிகளுக்காக இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு நீட்டிக்கப்பட்டது. மாலை 6 முதல் இரவு 7 மணி வரை, உரிய பாதுகாப்பு கவச உடைகளை அணிந்துவந்து கரோனா நோயாளிகள் வாக்களிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், சுகாதாரத் துறை சார்பில் வாக்குச்சாவடிகளுக்கு திரவ கிருமிநாசினி, உடல் வெப்பநிலை பரிசோதனைக் கருவி, வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான ரப்பர் கையுறை, கவச உடை, கரோனா நோயாளிகள் அணிந்து கொள்வதற்கான கவச உடை, வாக்காளர்களுக்கான பிளாஸ்டிக் கையுறை ஆகியவை ரூ.54 கோடி செலவில் வாங்கப்பட்டது.

இவற்றைக் கையாள ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் தலா2 சுகாதாரப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்கள், வாக்குப்பதிவின்போது வாக்காளர்களை முறைப்படுத்தி, வாக்களிக்க உதவினர். முகக்கவசம் அணியாத வாக்காளர்களை முகக்கவசம் அணியவைத்தும், முகக்கவசம் இல்லாதவர்களுக்கு முகக்கவசம் வழங்கியும், வாக்காளர்களுக்கு பிளாஸ்டிக் கையுறைகளை வழங்கியும் வாக்களிக்கச் செய்தனர். எனினும்,சில வாக்காளர்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கவில்லை. மேலும், வாக்களித்தபின் கையுறைகளை முறையாக அப்புறப்படுத்தாமல், கண்ட இடங்களில் வீசியெறிந்தனர். அவற்றை அப்புறப்படுத்த தூய்மைப் பணியாளர்கள் சிரமப்பட்டனர்.

வாக்குச்சாவடிகளில் மாலை 6மணிக்குமேல் கரோனா நோயாளிகள், உரிய பாதுகாப்பு கவச உடை அணிந்துவந்து, வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். அப்போது, வாக்குச்சாவடி அலுவலர்களும் கவச உடை அணிந்திருந்தனர். கரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவரும் திமுக எம்.பி. கனிமொழி, பாதுகாப்பு கவச உடை அணிந்துவந்து, மயிலாப்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.

அம்பத்தூர், பூந்தல்லி வேட்பாளர்கள் கவச உடை அணிந்து வாக்களிப்பு

அம்பத்தூர் தொகுதி திமுக வேட்பாளர் ஜோசப் சாமுவேல் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, வானகரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், அவர் நேற்று மாலை ஆம்புலன்ஸ் வாகனத்தில், கரோனா கவச உடையுடன் அம்பத்தூர் டீச்சர்ஸ் காலனியில் உள்ள அரசுப் பள்ளி வாக்குச்சாவடி மையத்துக்கு வந்து, அங்கு வாக்களித்தார்.

இதேபோல, கரோனாவால் பாதிக்கப்பட்டு, வானகரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பூந்தமல்லி திமுக வேட்பாளர் கிருஷ்ணசுவாமியும் கவச உடையணிந்து, பட்டாபிராமில் உள்ள தனியார் பள்ளி வாக்குச்சாவடி மையத்துக்கு நேற்று மாலை 6 மணிக்குமேல் ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் வந்து, வாக்களித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x