

சேலம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 18 பேர் வாக்குச்சாவடிகளில் கரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி வாக்களித்தனர்.
சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டப்பேரவைத் தொகுதிகளில் கரோனா பாதிக்கப்பட்டவர்கள் நேற்று முன்தினம் வரை சுமார் 400 பேர் இருந்தனர். இந்நிலையில், நேற்றைய வாக்குப்பதிவின்போது, கரோனா பரவலை தடுக்க பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது.
மேலும், தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள், கரோனா தொற்று அறிகுறிகள் உள்ளவர்கள் வாக்களிக்க வாக்குச்சாவடிகளில் மாலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை நேரம் ஒதுக்கப்பட்டது. அந்த நேரத்தில் வாக்குச்சாவடி அலுவலர்கள் கரோனா தடுப்பு பாதுகாப்பு உடை அணிந்து பணிபுரிய தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
மேலும், ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் சுகாதார அலுவலர், சுகாதார ஆய்வாளர், தன்னார்வலர்கள் இருவர் நியமிக்கப்பட்டிருந்தனர். சேலம் மாவட்டத்தில் சேலம் வடக்கு, சங்ககிரி, மேட்டூர், கெங்கவல்லி, ஆத்தூர் உள்ளிட்ட சில தொகுதிகளில், கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட 18 பேர் வாக்களிக்க விருப்பம் தெரிவித்தனர்.
இதையடுத்து, நேற்று அவர்கள் முழு பாதுகாப்பு உடையுடன் சுகாதாரத் துறை ஏற்பாடு செய்திருந்த சிறப்பு ஆம்புலன்ஸில் அந்தந்த தொகுதிகளின் வாக்குச்சாவடிக்கு நேற்று மாலை 6 மணிக்கு மேல் அழைத்து வரப்பட்டு வாக்களித்தனர். தொற்றாளர்கள் வாக்களித்து சென்ற பின்னர் வாக்குச்சாவடி முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.