

தேர்தல் அமைதியாகவும், சுதந்திரமாகவும் நடைபெற வாக்குச்சாவடி அலுவலர்கள் தேர்தல் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என கிருஷ்ணகிரி மாவட்ட தேர்தல் அலுவலர் ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி அறிவுறுத்தியுள்ளார்.
கிருஷ்ணகிரி ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு 3-வது கட்டமாக கணினி மூலம் சுழற்சி முறையில் பணி ஒதுக்கீடு செய்யும் பணி நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட தேர்தல் அலுவலர் ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி தலைமை வகித்தார்.
தேர்தல் பொது பார்வையாளர்கள் பால்சனா, பார்த்தசாரதி சென்ஷர்மா, ஹன்ஸ்ராஜ் சுஹான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களில் தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு கணினி மூலம் சுழற்சி முறையில் பணி ஒதுக்கப்பட்டது.
மேலும், இதுதொடர்பாக மாவட்ட தேர்தல் அலுவலர் கூறியதாவது:
மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள 2,298 வாக்குச்சாவடி மையங்களில், தேர்தல் பணியில் ஈடுபடும் 11,032 வாக்குச்சாவடி நிலைய தலைமை அலுவலர்கள் மற்றும் வாக்குச்சாவடி நிலை-1, 2 மற்றும் 3 அலுவலர்கள் கணினி மூலம் சுழற்சி முறையில் தேர்வு செய்யப்பட்டு பணி ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்டது.
இதேபோல பதற்றமான 426 வாக்குச்சாவடி நிலையங்களுக்கு 207 தேர்தல் நுண்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். முதன்மை அலுவலர், 3 நிலையிலான வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு இன்று (5-ம் தேதி) பணி ஆணை வழங்கப்படும்.
வாக்குச்சாவடி அலுவலர்கள் இந்திய தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்டுள்ள தேர்தல் விதிமுறைகளையும், கரோனா வைரஸ் தடுப்பு பாதுகாப்பு நெறிமுறைகளையும் பின்பற்றி, அனைத்து சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் தேர்தல் அமைதியாகவும், சுதந்திரமாகவும் நடைபெற ஒருங்கிணைந்து பணிபுரிய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் சதீஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.