

முதல்வர் பழனிசாமி, சேலம் ஆட்சியர் ராமனுக்கு வெடி குண்டு மிரட்டல் விடுத்த வழக்கில் கடிதத்தில் பதிவான கைரேகை கொண்டு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் மாநகர காவல் ஆணையர் அலுவல கத்துக்கு கடந்த மாதம் 29-ம் தேதி ரத்த கையெழுத்திட்ட மர்ம கடிதம் வந்தது. அதில், முதல்வர் பழனிசாமி, ஆட்சியர் ராமனுக்கு வெடி குண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு எழுதப்பட்டு இருந்தது. அந்த கடிதத்தில் இருந்த பெயர் குறித்து போலீஸார் விசாரணை செய்ததில், அன்னதானப்பட்டியில் உள்ள மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த அரிசி வியாபாரி தமிழரசன், தேவி உள்பட ஆறு பேர் பெயர் இருந்தது தெரியவந்தது.
தமிழரசனிடம் போலீஸார் விசாரணை செய்தனர். அவர் கடிதத்தை எழுதினாரா அல்லது அவரது பெயரில் வேறு யாராவது கடிதம் எழுதினார்களா என போலீஸார் விசாரித்தனர். விசாரணையில் தமிழரசனுக்கும், மாரியம்மன் கோயில் தெருவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு குடியிருந்து காலி செய்து சென்ற கால்நடை மருத்துவருக்கும் முன் விரோதம் இருந்தது தெரியவந்தது. அந்த மருத்துவர் தமிழரசனை சிக்க வைக்க வேண்டும் என்று கடிதத்தை எழுதினாரா என்பது பற்றியும் போலீஸார் விசாரிக்கின்றனர்.
கடிதத்தில் இரண்டு பேரின் கைரேகை பதிவாகியுள்ளதால், தமிழரசன் மற்றும் மருத்துவரின் கைரேகையை ஒப்பிட்டு பார்த்து, வெடி குண்டு மிரட்டல் கடிதம் எழுதியது யார் என்று கண்டுபிடிக்கும் பணியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.