

தேர்தலில் பணம் மற்றும் பரிசுப் பொருட்களை வாக்காளர்களுக்கு விநியோகம் செய்வதை தடுக்க தேர்தல் ஆணையம் மூலம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. தேர்தல் குழுவுடன், காவல்துறையினர் இணைந்து வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டப்பேரவைத் தொகுதி களுக்கும் 77 தேர்தல் பறக்கும் படை குழு, 11 இடங்களில் சோதனைச் சாவடிகள் ஏற்படுத்தப்பட்டு, வாகனத் தணிக்கை செய்யப்பட்டு வருகிறது.
அரசியல் கட்சிகள் இறுதிகட்ட தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் விநியோகம் செய்வதை தடுக்க மாவட்டம் முழுவதும் கூடுதலாக 30 இடங்களில் இரவு நேர சோதனைகள் மேற்கொள்ள தேர்தல் அதிகாரிகள் உத்தர விட்டுள்ளனர்.
சேலம் நகரம் மற்றும் மாவட்ட பகுதியில் தலா 15 இடங்களில் இரவுநேரங்களில் சோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டு அந்தவாகனங்களின் நகர்வு நடவடிக்கை யும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும், போலீஸார் 24 மணி நேரமும் ரோந்து சென்று சுழற்சி முறையில் கண்காணிப்பு பணியிலும், வாகனத் தணிக்கையிலும் ஈடுபடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.