

தூத்துக்குடி மாவட்ட தேர்தல் அலுவலரான ஆட்சியர் கி.செந்தில் ராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
நடைபெற உள்ள தமிழக சட்டப்பேரவை பொதுத் தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் கேபிள் டிவி, தொலைக்காட்சி சேனல்கள் மற்றம் சமூக வலைதளங்களில் தேர்தல் பிரச்சாரம் செய்வதற்காக சான்றிதழ் பெறும் பொருட்டு மாவட்ட அளவில் ஊடகச்சான்று மற்றும் கண்காணிக்கும் குழு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஆட்சியர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது.
தொலைக்காட்சி சேனல்கள் ,கேபிள் டிவி, ரேடியோ, தனியார்எப்.எம் சேனல்கள், திரையரங்குகள், இ-பேப்பர், ஆகியவை அனைத்திலும் தேர்தல் தொடர்பான விளம்பரங்களை வெளியிடவோ, ஒளிபரப்பவோ விரும்பும் அரசியல் கட்சிகள் மற்றும்வேட்பாளர்கள் இந்த குழுவின்மூலம் முன்கூட்டியே சான்றளிக்கப்பட்ட பின்னரே அவற்றை வெளியிட வேண்டும்.
வரும் 05.04.2021 மற்றும் 06.04.2021 ஆகிய இரண்டு நாட்களில் மட்டும் எந்த ஒரு பத்திரிகைகளிலும் தேர்தல் விளம்பரம் செய்யப்பட வேண்டுமாயினும் இக்குழுவினரின் முன் அனுமதி பெற வேண்டியது அவசியம். தொலைக்காட்சி மூலமாக அனுமதியின்றி செய்யும் விளம்பரங்கள் அனைத்தும் இந்த குழுவினரால் கண்காணிக்கப்படும்.
பதிவு செய்யப்பட்ட கட்சியின் வேட்பாளர்கள் விளம்பரம் செய்வதற்கு உத்தேசித்துள்ள தினத்தில் இருந்து மூன்று தினங்களுக்கு முன்பாகவும், பதிவு செய்யப்படாத அரசியல் கட்சி வேட்பாளர்கள் மற்றும் இதர வேட்பாளர்கள் 7 தினங்களுக்கு முன்பாகவும் விளம்பரங்களுக்கு அனுமதி பெற விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த நாளில் இருந்து இரண்டு நாட்களுக்குள் அனுமதி வழங்கப்படும்.
அனுமதி பெறாமல் தேர்தல் விளம்பரங்களை ஒளிபரப்பினால் சம்பந்தப்பட்ட ஒளிபரப்பு நிறுவனங்களின் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 171 (எச்)-ன்கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப் படும். தேர்தல் தொடர்பாக விநியோகிக்கப்படும் துண்டு பிரசுரங்கள் மற்றும் சுவரொட்டிகளில் அச்சகத்தின் பெயர் மற்றும் முகவரி அச்சடிக்கப்படாதது குறித்து இக்குழுவினரின் கவனத்திற்கு வருமாயின் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951 பிரிவு 127-ன்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
வேட்பாளர்கள், தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியது தொடர்பாக ஊடகங்கள் மூலமாக வரப்பெறும் புகார்களையும் இக்குழுவானது விசாரணை மேற்கொண்டு,மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் தேர்தல் பார்வையாளர் ஆகியோருக்கு அறிக்கை சமர்ப்பிக்க அதிகாரம் உள்ளது. இக்குழுவின் உத்தரவு திருப்திகரமாக இல்லையெனில், மாநில அளவில் உள்ள ஊடகச்சான்று மற்றும் கண்காணிக்கும் குழுவிடம் மேல் முறையீடு செய்து கொள்ள வழிவகை உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.