தேர்தலில் அதிமுக கூட்டணி 190 தொகுதிகளில் வெற்றி பெறும் : புதிய நீதிக்கட்சித் தலைவர் கருத்து
ஈரோடு கிழக்குத் தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் தமாகா வேட்பாளர் எம்.யுவராஜாவை ஆதரித்து புதிய நீதிக்கட்சித்தலைவர் ஏ.சி.சண்முகம் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து செய்தி யாளர்களிடம் அவர் கூறியதாவது:
திமுக எம்.பி. ஆ.ராசா முதல்வரின் தாயார் குறித்து விமர்சனம் செய்தது மனவருத்த மளிக்கிறது. இதற்கு தமிழக வாக்காளர்கள் தேர்தலில் தக்க பதில் அளிப்பார்கள். எனக்கு 45 ஆண்டுகால அரசியல் அனுபவம் உள்ளது. தமிழகம் முழுவதும் நான் பிரச்சாரத்திற்கு செல்லுமிடங்களில் எல்லாம், வாக்காளர்கள் அதிமுக அரசு அமைய வேண்டும் என்ற எண்ணத்தோடு வரவேற் பளிப் பதைப் பார்க்கிறேன். அதிமுக கூட்டணி 190 இடங்களுக்கு மேல் தேர்தலில் வெற்றி பெறும்.
தமிழகத்தில் தற்போதைய நல்லாட்சி தொடர வேண்டும். அதேபோல், இந்த தேர்தல் வெற்றி மூலம் பிரதமர் மோடிக்கு பலம் சேர்க்க வேண்டும். உலக தலைவர்கள் மதிக்கும் பிரதமராக மோடி விளங்குகிறார். நெசவாளர்கள் பாதுகாப்பாக இருக்கவும், அவர்கள் தொழில் வளரவும் அதிமுக ஆட்சி மலர வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
